

சென்னை: ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியரான தினேஷ் ராஜய்யா உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா-பாட்மின்டன் 2022 போட்டியில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உகாண்டாவில் உள்ள கம்பாலா நகரில் கடந்த செப்.13 முதல் 18-ம் தேதி வரை, உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் கீழ் ஆப்பிரிக்கா பேட்மின்டன் சம்மேளனம் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. 20 நாடுகளை சேர்ந்த 191 வீரர்கள் 21 பிரிவுகளின் கீழ் போட்டியிட்டனர்.
இவர்களில் இந்திய அணியினர் 12 தங்கம், 14 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வெற்றனர். இதில் ராம்கோ சிமென்ட்ஸ் ஊழியரான தினேஷ் ராஜய்யா சிங்கிள், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். உகாண்டாவில் உள்ள இந்திய துணைத் தூதர் ஏ.அஜய் குமார், கம்பாலாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தினேஷ் ராஜய்யா மற்றும் இந்திய அணியினருக்குப் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
ராம்கோ சார்பில் 2017-ம் ஆண்டு முதல் விளையாடிவரும் தினேஷ் ஏற்கெனவே துபாய் சர்வதேச பாரா-பாட்மின்டன் 2022, இந்தோனேஷியா சர்வதேச பாரா-பாட்மின்டன் 2022 போட்டிகளில் காலிறுதிச் சுற்றுவரை தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச் சுற்று வரும் 2023 ஜனவரியில் நடைபெறஉள்ளது. இதில் வெற்றிபெற்று பாராலிம்பிக்ஸ் போட்டியில் தினேஷ் போட்டியிட ராம்கோ சிமென்ட்ஸ் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.