

நடப்பு ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட சீசனில் தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார் ரொனால்டோ. அதோடு கிளப் அணிக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆக இது அமைந்துள்ளது. சரியாக கடந்த 20 ஆண்டுகள் 2 தினங்களுக்கு முன்னர் அவர் கிளப் அணிக்காக முதன்முதலில் கோல் பதிவு செய்திருந்தார். அவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியில் விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்தாட்ட உலகிலேயே அதிக கோல்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 37 வயதான அவர் வசம் நிறைய சாதனைகள் உள்ளன. அதோடு பல மைல்கற்களுக்கு அவர் சொந்தக்காரரும் கூட. போர்ச்சுகல் அணிக்காக அவர் மொத்தம் 117 கோல்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நடப்பு ப்ரீமியர் லீக் சீசனில் எவர்டன் அணிக்கு எதிராக அவர் தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் இந்த கோலை அவர் பதிவு செய்திருந்தார். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. வலைக்குள் பந்தை தள்ளி கோல் போட்டு அசத்தினார்.
ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக 5, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 144, ரியல் மேட்ரிட் அணிக்காக 449 மற்றும் ஜூவான்டஸ் அணிக்காக 101 என மொத்தம் 700 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார்.
“700 கோல்களை பதிவு செய்வது எனப்து சுவாரஸ்யமான ஒன்று. அவருக்கு எனது வாழ்த்துகள். நிச்சயம் அவர் வரும் நாட்களில் மேலும் சில கோல்களை பதிவு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, யுவராஜ் சிங் போன்ற பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.