

ஹாக்கியில் தமிழக அணி தோல்வி
குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஆடவர் ஹாக்கி கால் இறுதி சுற்றில் தமிழ்நாடு – ஹரியாணா மோதின. இதில் தமிழக வீரர்களுக்கு ஊடாக பந்தை கடத்திச் செல்கிறார் ஹரியாணாவின் பரத். ஹரியாணா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
பாபர் அஸம் விளாசலில் பாகிஸ்தான் வெற்றி
கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று நியூஸிலாந்து – பாகிஸ்தான் மோதின. இதில் 148 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அஸம் 53 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார்.
இறுதிப் போட்டியில் பிரான்சிஸ் தியாஃபோ
க்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் தென் கொரியாவின் வான் சூன் வூ-க்கு எதிராக அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ விளையாண்டார். இதில் பிரான்சிஸ் தியாஃபோ 6-2, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் 180 பேர் பங்கேற்கும் கால்பந்து போட்டி
சென்னை: லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ் அதன் இரண்டாவது பதிப்பான சென்னை கால்பந்து போட்டியை (சிகேஎல்) நடத்த உள்ளது. இந்தத் தொடர் சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரியில் நாளை தொடங்கி (10-ம் தேதி) 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் இந்த போட்டிகளில் விளையாடுகின்றனர். இரு பிரிவிலும் தலா 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தொடரில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவ, மாணவியர் கலந்துகொள்கின்றனர்.
யோகாவில் தங்கம் வென்றார் வைஷ்ணவி
அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான ஆர்டிஸ்டிக் யோகாசனாவில் தமிழகத்தின் எஸ்.வைஷ்ணவி 134.22 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாகுலி பன்சிலால் செலோகர் (127.68) வெள்ளிப் பதக்கமும், பூர்வ சிவராம் கினாரே (126.68) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.