Published : 09 Oct 2022 06:40 AM
Last Updated : 09 Oct 2022 06:40 AM
ராஞ்சி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது ஆட்டம் ராஞ்சியில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் உயிர்ப்பிப்புடன் வைத்திருக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது ஷிகர் தவண் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக செயல்பட தவறியது. ஷிகர் தவண், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் மட்டையை சுழற்றும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கலாம்.
ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும். மொகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் முதல் ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படக் கூடும்.
இதற்கிடையே காயம் காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக தமிழத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கக் கூடும். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் கேப்டன் தெம்பா பவுமாவின் பார்ம் மட்டுமே கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. டி 20 தொடரில் 3 ஆட்டங்களிலும் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்த அவர், முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்களில் நடையை கட்டினார். டி 20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில் பவுமா, உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அதேவேளையில் டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். டி 20 தொடரில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரபாடாவை உள்ளிடக்கிய பந்து வீச்சுத்துறை முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தது. இன்றைய ஆட்டத்திலும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரக்கூடும்.
நேரம்: பிற்பகல் 1.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT