Last Updated : 08 Oct, 2022 10:22 AM

Published : 08 Oct 2022 10:22 AM
Last Updated : 08 Oct 2022 10:22 AM

ஓய்வை நோக்கி பயணிக்கும் மெஸ்ஸி

கால்பந்து உலகில் அசாத்திய சாதனைகள் பல படைத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஆதர்ச நாயகனாக குடி கொண்டிருப்பவர் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி வரும் நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ளஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரேதான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை தொடர் என அறிவித்துள்ளார். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து அரங்கில் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்திய அற்புதங்களும், வென்று குவித்துள்ள விருதுகளுமே அவரது திறனை பறை சாற்றும்.1995-ல் இளம் பாலகனாக தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார் மெஸ்ஸி. குழந்தை பருவத்திலேயே மெஸ்ஸியிடம் அசாத்திய திறமைகள் வெளிப்பட்டதால் அவரது தந்தையே அவருக்கு முதலில் பயிற்சி கொடுத்தார்.

மெஸ்ஸியின் திறன் நாளுக்கு நாள் மெருகேறுவதை அறிந்த அவர், மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாட மெஸ்ஸியை பழக்கப்படுத்தினார். அந்த நேரத்தில் தனது வயதையும், உருவத்தையும் கண்டு ஏளனம் செய்தவர்களுக்கு எதிராக தனது கால் அசைவுகளால் பதிலடி தந்தார். சிறுவயதிலேயே கிளப் மட்டத்தில் காலடி எடுத்து வைத்த மெஸ்ஸி அங்கிருந்து ஏறுமுகம் கண்டார்.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் அறிமுகபோட்டி என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். மெஸ்ஸிக்கு அந்த கனவு 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 2005-ம் ஆண்டு ஹங்கேரிக்கு எதிரான சர்வதேச போட்டியில் அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி அறிமுகம் செய்யப்பட்டார். பதிலி வீரராக களமிறங்கிய மெஸ்ஸி 2 நிமிடங்களில் களத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் தேசிய அணியின் அமைப்பில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார் மெஸ்ஸி. 2006-ல் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஜெர்மனிக்கு பயணம் செய்தார். தொடர்ந்து 2010-ல் தென் ஆப்பிரிக்கா, 2014-ல் பிரேசில், 2018-ல் ரஷ்யா உலகக் கோப்பை தொடர்களிலும் மெஸ்ஸி விளையாடினார்.

தற்போது மெஸ்ஸி 5-வது முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளார். 2005-ம்ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக அறிமுகமான மெஸ்ஸி 164 ஆட்டங்களில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியிலில் மெஸ்ஸிக்குதான் முதலிடம்.

டிபண்டர்களுக்கு இடையில் பந்தை அவர்,கடைந்து எடுத்து கடத்திச் செல்வதும், ஃபிரீகிக்கில் பாக்ஸின் விளிம்பு பகுதியில் இருந்து காற்றை கிழித்துக்கொண்டு பந்தை அவர், ட்ரில் செய்து கோல் வலைக்குள் திணிக்கும் அழகேதனிதான். இதனாலேயே அவரை ‘மந்திர நாயகன்’ என வர்ணித்தனர். கால்பந்தில் உயரிய விருதான பாலோன் டி ஓர் விருதை மெஸ்ஸி 7 முறை வென்று குவித்துள்ளார்.

லயோனல் ஸ்காலோனியின் பயிற்சியின் கீழ்சமீபகாலமாக அர்ஜெண்டினா அணி சிறப்பாகதிறனை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 35 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் அர்ஜெண்டினா அணி வலம் வருகிறது. சிறந்த பார்மில் இருப்பதால் இம்முறை உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக அர்ஜெண்டினா இருக்கும் என கருதப்படுகிறது.

சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜெண்டினாவின் ஜாம்பவான் டிகோ மரடோனாவை பின்பற்ற மெஸ்ஸி அடிக்கடி போராடி உள்ளார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜெண்டினா தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இதில் இருந்து மெஸ்ஸியை துரதிருஷ்டம் துரத்தத் தொடங்கியது.

கிளப் மட்டத்தில் அசகாய சூரனாக திகழும் மெஸ்ஸி, தேசிய அணிக்காக சிறப்பாக விளையாடுவதில்லை என்ற முத்திரை விழத் தொடங்கியது. 2015 மற்றும் 2016-ம் ஆண்டு என இருமுறை கோபா அமெரிக்கா கால்பந்துதொடரின் இறுதி சுற்றில் மெஸ்ஸியால் அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் போனது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்துஓய்வு பெறும் முடிவுக்கு சென்றார் மெஸ்ஸி.ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தனதுமுடிவை மாற்றிக் கொண்டு 2018-ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவுக்காக களம் கண்டார். லீக் சுற்றில் குரோஷியாவிடம் 0-3 என உதை வாங்கிய நிலையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸிடம் 3-4 என தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அர்ஜெண்டினா.

இம்முறை மெஸ்ஸி மனம் தளரவில்லை. மாறாக தன்னை மேலும் பட்டை தீட்டினார். கத்தார் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுஆட்டங்களில் கூடுதல் சுறுசுறுப்புடன் செயல்பட்டார். மேலும் தேசிய அணிக்குள் இளம் வீரர்கள் பலரும் பிரவேசம் செய்தனர். அவர்களைக் கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்ஸி. சர்வதேச அரங்கில் 28 வருடங்களுக்கு பிறகு அர்ஜெண்டினா அணி வென்ற முதல் கோப்பையாக இது அமைந்திருந்தது. இந்த பட்டம் சரியான நேரத்தில் மெஸ்ஸின் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது கத்தார் உலகக் கோப்பையிலும் பிரதிபலிக்கக்கூடும். அர்ஜெண்டினா 1978, 1986-ம்ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது. அந்த அணியின் 36 வருட ஏக்கத்துக்கு இம் முறை ‘மந்திர நாயகன்‘ மெஸ்ஸி தனது கால்களின் ஜாலத்தால் மாயம் செய்து தீர்வு காணக்கூடும். கத்தாரில் வரும் நவம்வர் 20-ம் தேதிஉலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்குகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா தனது முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி சவுதி அரரேபியாவை எதிர்கொள்கிறது.

ஓய்வு முடிவு குறித்து லயோனல் மெஸ்ஸி கூறும்போது, “கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பையே நான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடர். இது உறுதி. நாங்கள் ஒரு நல்ல தருணத்தை அடைந்துள்ளோம். மிகவும் வலுவான குழுவுடன் இருக்கிறோம். ஆனால் உலகக் கோப்பை தொடரில் எதுவும் நடக்கலாம்.

சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என கருதப்படும் எந்த ஒரு அணியும் எப்போதுமே தொடரை சிறப்பாக முடித்தது கிடையாது. அர்ஜெண்டினா அணி எப்போதுமே உலகக் கோப்பை தொடரை வெல்லக்கூடியதாக கருதப்படும். ஏனெனில் எங்களது கால்பந்து வரலாறு அவ்வாறு உள்ளது. ஆனால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் நாங்கள் மட்டும் இல்லை. எங்களுக்கு மேலே உள்ள அணிகளும் இருக்கின்றன” என்றார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x