2 பெரிய ஷாட்கள் விளையாடியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் - சஞ்சு சாம்சன்

2 பெரிய ஷாட்கள் விளையாடியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் - சஞ்சு சாம்சன்
Updated on
1 min read

லக்னோ: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் 250 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில்

கடைசி வரை வெற்றிக்காக போராடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டி முடிவடைந்ததும் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

கடைசி வரை போராடியும் வெற்றி கிடைக்காதது வருத்தமே. நான் கூடுதல் நேரம் ஆடுகளத்தில் நேரத்தை செலவிட விரும்புகிறேன். குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் அதிக நேரம் விளையாட விரும்புகிறேன். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம். இரண்டு பெரிய ஷாட்கள் விளையாடியிருந்தால் அதாவது ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை கடைசி நேரத்தில் விளாசியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

அடுத்த போட்டியில் அதை ஈடுகட்ட முயற்சிப்பேன். முதல் போட்டியில் எனது பங்களிப்பு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உண்மையில் சிறப்பாக பந்துவீசினர். தொடக்கத்தில் அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. 20-வது ஓவருக்குப் பிறகு பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. 80-க்கும் மேற்பட்ட ரன்களை நான் எடுத்திருந்தாலும் பேட்டிங்கில் சில தவறுகள் செய்தேன். இது எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. அடுத்த போட்டியில் தவறுகளை சரிசெய்வோம்.

தற்போது நடைபெறும் ஆட்டங்களில் 5 ஓவர்களில் 50 ரன்களை எடுப்பது எளிதுதான். இருந்தாலும் எங்களது பேட்டிங் துறையை நாங்கள் மேம்படுத்த வேண்டும். தென் ஆப்பிரிக்க அணி மிகச் சிறந்த அனுபவ வீரர்களைக் கொண்ட அணியாக உள்ளது. இந்தத் தொடர் எங்களுக்கு சவாலானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை (9-ம் தேதி) நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in