

மும்பை: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
ஆடவருக்கான ஐசிசி டி 20உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அதிகாலை மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ள உள்ளது. டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னதாக இந்திய அணியானது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணியை வரும் 23-ம் தேதி மெல்பர்ன் நகரில் சந்திக்கிறது.