Published : 06 Oct 2022 10:48 PM
Last Updated : 06 Oct 2022 10:48 PM

IND vs SA முதல் ஒருநாள் போட்டி | சஞ்சு சாம்சன் போராட்டம் வீண் - விக்கெட் சரிவால் இந்திய அணி தோல்வி

லக்னோ: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.

மழை காரணமாக தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மூன்றாவது ஓவரே சுப்மன் கில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 3 ரன்களுக்கு அவர் வெளியேற, 4 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஷிகர் தவானும் அடுத்த சில ஓவர்களிலேயே நடையைக்கட்டினார். ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும் நிதானமான துவக்கம் கொடுத்தாலும் பெரிய ரன்கள் சேர்க்க தவறினர். கெய்க்வாட்19 ரன்களுக்கும், இஷான் 20 ரன்களுக்கும் அவுட் ஆக, இந்திய அணி நிலை தடுமாறியது.

ஷ்ரேயாஸ் மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து அணியின் ஸ்கோரை அதிகரித்தனர். இருவரும் அதிரடியை கையாள வெற்றி இலக்கு நெருங்கியது. அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் அடுத்த பந்தே விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் வந்த ஷர்துல் தாகூர் ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நெருங்க கைகொடுக்க, சாம்சன் தனது அதிரடியை தொடர்ந்தார். 18வது ஓவரை வீசிய இங்கிடி, தனது ஸ்லோ பந்துகளால் அடுத்தடுத்து ஷர்துல் மற்றும் குல்தீப் விக்கெட்டை எடுத்து ஷாக் கொடுத்தார்.

அடுத்த ஓவர் வீசிய ரபாடா அவேஷ் கான் விக்கெட்டையும் எடுக்க கடைசி 6 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கர் என்டில் சாம்சன் இருக்க ஸ்பின்னர் ஷம்சி பந்துவீசினர். முதல் பந்தில் சிக்ஸ், அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்து மைதானத்தில் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தார் சாம்சன். ஆனால், நான்காவது பந்து டாட் பாலாக அமைய 2 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 5ம் பந்தில் பவுண்டரி அடித்தாலும், ஒரு பந்தில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் 86 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் இங்கிடி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்: டாஸை வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக தவான் செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்தது. மலான் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். டிகாக், 54 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன் மற்றும் மில்லர் இணையர் 139 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிளாசன் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். இந்திய அணி 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x