

லக்னோ: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 249 ரன்களைக் குவித்தது. அந்த அணிக்காக டிகாக், கிளாசன் மற்றும் மில்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த நிலையில், இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸை வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக தவான் செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்தது. மலான் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். டிகாக், 54 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன் மற்றும் மில்லர் இணையர் 139 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிளாசன் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். இந்திய அணி 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது.