

மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 25 வயதாகும் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். பிரிட்ஜ்டவுண் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அப்போது கனமழை பெய்திருந் ததால் அவரது பிஎம்டபிள்யூ கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.
விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்திலேயே ரோச் தனது உடல்நிலை குறித்த தகவலை டுவிட்டர் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தனக்கு பெரிய ஆபத்து ஏதும் இல்லை என்றும், தன் மீது அக்கறை எடுத்துக் கொண்டுள்ள நண்பர்கள், உறவினர்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 61 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோச், கடந்த ஓராண்டுக்கு முன்பு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.