

டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்தை பிடித்துள்ளார். 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உள்ள கோலி தனது வாழ்நாளில் 4-வது இடத்துக்கு முதன்முறையாக முன்னேறி உள்ளார்.
இதன் மூலம் முதலிடத்தில் உள்ள ஸ்மித், 2-ம் இடத்தில் உள்ள ஜோ ரூட், 3-ம் இடத்தில் உள்ள கேன் வில்லியம்சுக்கு அடுத்ததாக விராட் கோலி இடம்பெற்றுள்ளார். தற்போதைய கிரிக்கெட்டில் 4 முதல் தர பேட்ஸ்மென்களும் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளனர். பந்து வீச்சு தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி 248 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவரது சிறப்பான ஆட்டத்தால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
டி 20 போட்டிகளில் முதலிடத்திலும், ஒருநாள் போட்டிகளில் 2-வது இடத்திலும் இருக்கும் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இதற்கு முன்னர் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியது இல்லை.
விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 81 ரன்களும் விளாசியதால் தற்போதைய தரவரிசை பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 822 புள்ளிகளுடன் 4-வது இடத்தை முதன்முறையாக கைப்பற்றி உள்ளார் கோலி. இந்த இடத்துக்கு முன்னேறும் 11-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
27 வயதான கோலி, விசாகப்பட்டினம் போட்டியின் மூலம் 97 புள்ளிகள் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது 844 புள்ளிகளுடன் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள உள்ளார். மொகாலியில் வரும் 26-ம் தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் கோலி மீண்டும் பேட்டிங்கில் அசத்தும் பட்சத்தில் தரவரிசையில் உச்ச நிலைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் வில்லியம்சன் 838 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் சதம் அடித்த மற்றொரு இந்திய வீரரான சேதேஷ்வர் புஜாரா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்களான விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவவ் 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தையும், பென் ஸ்டோக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பேர்ஸ்டோவ், விசாகப்பட்டினம் போட்டியில் முறையே 53 மற்றும் 34 ரன்களும், ஸ்டோக்ஸ் 78 மற்றும் 6 ரன்களும் எடுத்திருந்தனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் முகமது ஷமி 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 21-வது இடத்தை பிடித்தார். ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடு 5-வது இடத்துக்கும், மொயின் அலி 23-வது இடத்துக்கும் முன்னேறினர்.