36-வது தேசிய விளையாட்டு போட்டி - தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ், ஆரத்தி தங்கம் வென்று அசத்தல்

36-வது தேசிய விளையாட்டு போட்டி - தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ், ஆரத்தி தங்கம் வென்று அசத்தல்
Updated on
1 min read

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த லிகித் 2:16.40 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். தமிழகத்தின் எஸ்.தனுஷ் (2:18.81) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் அணியைச் சேர்ந்த சுதேஷ் (2:20.76) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தமிழக அணி 18-21 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

பளுதூக்குதலில் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ் 206 கிலோ (89 117) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். உத்தரப்பிரதேசத்தின் பூனம் யாதவ் 205 கிலோ (92 113) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் ஹர்ஜிந்தர் கவுர் 204 கிலோ (89 115) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ரோலர் ஸ்போர்ட்ஸில் ஆடவருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் அனந்தகுமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இன்லைன் ஃப்ரீஸ்டைல் ஸ்பீட் ஸ்லாலோம் பிரிவில் தமிழகத்தின் சர்வேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரிலேவில் தமிழகம் வெள்ளி வென்றது. ரோலர் ஸ்போர்ட்ஸில் மகளிருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஆரத்தி 1:39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். ரிலே பிரிவில் தமிழக மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. ஸ்கேட் போர்டிங் பார்க்கில் தமிழகத்தின் பி.கமலி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆர்டிஸ்டிக் ஸ்கேட்டிங் ஜோடி நடனத்தில் தமிழகம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் நயனா ஜேம்ஸ் 6.33 மீட்டர் நீளம்தாண்டி தங்கம் வென்றார். உத்தரபிரதேசத்தின் ஷைலிசிங் (6.28) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் ஸ்ருதி லட்சுமி (6.24) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in