சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு தயார்: இங்கிலாந்து கேப்டன் குக்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு தயார்: இங்கிலாந்து கேப்டன் குக்
Updated on
1 min read

வியாழனன்று விசாகப்பட்டணத்தில் தொடங்கவிருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து ஆட்டக்களத்திற்கு தங்கள் பேட்ஸ்மென்களும், ஸ்பின்னர்களும் தயார் என்று இங்கிலாந்து கேப்டன் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் சற்றும் எதிர்பாராத விதமாக அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா பந்தை திருப்ப போராடிய சமயத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷீத், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஃபர் அன்சாரி மற்றும் மொயின் அலி தங்களிடையே 13 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டு வலுவான இந்திய பேட்டிங் வரிசையை கடைசி நாளன்று பாடுபடுத்தினர்.

அஸ்வின் 230 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து டிசம்பர் 2012-க்குப் பிறகு உள்நாட்டில் மிக மோசமாக வீசினார்.

இந்நிலையில் தங்கள் ஸ்பின் குழு அருமையாக வீசியதற்கு ஆலோசகர் சக்லைன் முஷ்டாக் காரணம் என்று அவரைப் பாராட்டிய அலஸ்டைர் குக் “மூன்று ஸ்பின்னர்களும் அருமையாக வீசினர்.

இதற்கு சக்லைன் முஷ்டாக்கிற்கு நன்றி, அவர்தான் இந்த மூவருக்கும் நம்பிக்கையளித்தார். இந்த பிட்ச்களில் இவர்களுக்கு அனுபவமில்லை, ஆனால் சக்லைன் முஷ்டாக் ஆலோசனைகளினால் இந்தத் தொடரில் மிகப்பெரிய அடி எடுத்து வைத்துள்ளனர்.

விசாகப்பட்டணத்தில் ஸ்பின் பிட்ச் அமைந்தால் கவலையில்லை, இப்போது இங்கிலாந்தின் 3 ஸ்பின்னர்களும் நம்பிக்கையுடன் வீசி வரும் நிலையில் நாங்கள் ஏன் இந்திய அணிக்கு இவர்களைக் கொண்டு நெருக்கடி கொடுக்க முடியாது?

எனவே நிச்சயம் இந்திய அணிக்கு ஸ்பின் பிட்சில் நெருக்கடி கொடுப்போம். முதல் டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் நெருக்கடி கொடுத்தோம், ஆனால் வெற்றி பெற முடியவில்லை, இந்நிலையில் 0-0 என்று 2-வது டெஸ்டில் ஆடுவது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய ரசிகர்களுக்கு சுவாரசியமான டெஸ்ட் போட்டியை நாங்கள் அளிப்போம்” என்றா குக்.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது, ஆனால் ஜிம்மி ஆண்டர்சன் தயாராக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in