Published : 02 Oct 2022 06:30 AM
Last Updated : 02 Oct 2022 06:30 AM
அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியாணாவின் ரமிதா, அர்ஷ்தீப் சிங் ஜோடி 17-9 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தின் ஸ்ரேயா அகர்வால், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. தமிழகத்தின் நர்மதா நித்தின், ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் ஜோடி 16-12 என்ற கணக்கில் பஞ்சாப்பின் சமிக் ஷா திங்க்ரா, அர்ஜூன் பபுதா ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேசத்தின் அபிஷேக் பால் பந்தய தூரத்தை 16:34.68 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். சர்வீசஸ் அணியைச் சேர்ந்த கார்த்திக் குமார் (14:08.24) வெள்ளிப் பதக்கமும், சவான் பர்வால் (14:10.53) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேசத்தின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 16:34.68 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இமாச்சல் பிரதேசத்தின் சீமா (16:36.18) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிராவின் சஞ்ஜிவானி ஜாதவ் (16:39.97) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆடவருக்கான பளுதூக்குதலில் 67 கிலோ எடைப் பிரிவில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த சுபாஷ் லஹ்ரே 275 கிலோ (121 154) எடையை தூக்கி தங்கம் வென்றார். ஆந்திராவின் நீலம் ராஜூ (270 கிலோ) வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் சுஷாந்த் சாஹூ (270 கிலோ) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 11:51 விநாடிகளில் கடந்து தங்கம்வென்றார். தமிழகத்தின்அர்ச்சனா சசீந்திரன் 11:55 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகாராஷ்டிராவின் தியாந்திரா 11:62 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அசாமின் அம்லன் போர்கோஹேய்ன் 10:38 விநாடிகளில் இலக்கை அடைந்துதங்கம் வென்றார். தமிழகத்தின் இலக்கியதாசன் 10:44 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு தமிழக வீரரான சிவகுமார் (10:48 விநாடிகள்) வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த முகமது அஜ்மல் 46.29 விநாடிகளில் இலக்கை எட்டி தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ் (46.45 விநாடிகள்) வெள்ளிப்பதக்கமும், டெல்லியின் அமோஜ் ஜேக்கப் (46.62 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டில் அங்கித் சர்மா 8.04 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசங்கர் (7.93) வெள்ளிப் பதக்கமும், முகமது அனீஷ் யாஹியா (7.92) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஆடவருக்கான குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியின் தஜிந்தர் சிங் தூர் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். பஞ்சாப்பின் கரன்வீர் சிங் (19.17) வெள்ளிப் பதக்கமும், ஹரியாணாவின் இந்தர்ஜீத் சிங் (18.64) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கதிரவன், இலக்கியதாசன், ஜெயக்குமார், சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி பந்தய தூரத்தை 40.01 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. கேரள அணி (40.45) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்ரா அணி (40.67) வெண்கலப் பதக்கமும் வென்றன.
மகளிருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் உயரம் தாண்டி தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2014-ல் சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தமிழகத்தை சேர்ந்த மற்ற வீராங்கனைகளான பவிதா வெங்கடேஷ் (4.00 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், பரணிகா இளங்கோவன் (3.90 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கேரளா அணி 45.52 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றது. தமிழக அணி (45.54) வெள்ளிப் பதக்கமும், மத்திய பிரதேஷ் (46.03) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.
ஆடவருக்கான பளுதூக்குதலில் 73 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் என்.அஜித் 315 கிலோ(141 174) எடையை தூக்கி தங்கம் வென்றார். மேற்கு வங்கத்தின் அச்சிந்தா ஷூலி 295 கிலோ (130 165) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், கேரளாவின் தேவப்ரீதன் 290 கிலோ (125 165) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வாள்வீச்சில் சேபர் அணிகள் பிரிவில் தமிழகம் 45-38 என்ற கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT