Published : 30 Sep 2022 09:12 AM
Last Updated : 30 Sep 2022 09:12 AM

முதுகு வலி காரணமாக டி 20 உலகக் கோப்பையில் இருந்து பும்ரா விலகல் - ஓய்வால் வந்த வினையா?

புதுடெல்லி: முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளார்.

28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை.

முதுகு வலி காரணமாக அவர், களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பும்ரா, இந்திய அணியினருடன் திருவனந்தபுரம் பயணிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. தற்போது அவர்,முதுகு வலியின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து பும்ரா குணமடைய நீண்ட காலம் ஆகும்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “பும்ரா நிச்சயம் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டார். அவருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமாக உள்ளது. எலும்பு பகுதியில் ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக அவர், 6 மாதங்கள் விளையாட முடியாது” என்றார்.

பும்ராவுக்கு பதிலாக உலகக் கோப்பைக்கான பிரதான அணியில் தீபக் சாஹர் அல்லது முகமது ஷமி சேர்க்கப்படக்கூடும் என தெரிகிறது. ஏனெனில் இவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் மாற்று வீரர்கள் பட்டியலில் மொகமது சிராஜ் இணைய வாய்ப்பு உள்ளது.

ஏற்கெனவே காயம் காரணமாக ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா விலகிய நிலையில் தற்போது பும்ராவும் விலகி உள்ளது டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். டி 20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் இந்திய அணி பந்து வீச்சு துறை செட்டில் ஆகாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பும்ராவின் காயம் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோரை கவலை அடையச் செய்துள்ளது.

ஓய்வால் வந்த வினையா?

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “பும்ரா, ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பையில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்புதான். இதுபோன்ற விஷயங்கள் நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பணிச்சுமையை நிர்வகிக்கும் விதமாகவே ஆசிய கோப்பையில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருந்தாரா என்பதே கேள்வியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x