Published : 30 Sep 2022 06:07 AM
Last Updated : 30 Sep 2022 06:07 AM
அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். போட்டிகள் அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தொடக்க விழா பிரம்மாண்டாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்துகொண்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். முன்னதாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
முன்னதாக மகளிருக்கான டென்னிஸ் அணிகள் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா மோதின. இதில் தமிழ்நாடு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதியில் மகாராஷ்டிராவை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி. மற்றொரு அரை இறுதியில் குஜராத் – கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகின்றன.
துப்பாக்கி கூடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் தமிழகத்தின் கார்த்திக் சபரி ராஜ் 632.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். அதேவேளையில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் கர்நாடகாவின் திலோத்தமா சென் 633.6 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார்.
விளையாட்டு துறையை சுத்தப்படுத்தி உள்ளோம்
தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் கடந்த காலத்திலும் திறமையானவர்களாகவே திகழ்ந்தனர். பதக்கம் வெல்வதற்கான இந்த நகர்வுகளை முன்பே தொடங்கியிருக்கலாம். ஆனால், தொழில்முறைக்கு பதிலாக விளையாட்டுகளில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் இருந்தது. இதை நாங்கள் சுத்தம் செய்து இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளோம். விளையாட்டில் வீரர்கள் பெறும் வெற்றி மற்ற துறைகளில் நாட்டின் வெற்றிக்கு வழி வகுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT