Published : 01 Jul 2014 02:51 PM
Last Updated : 01 Jul 2014 02:51 PM

பிரெண்டன் மெக்கல்லம் அபார கேப்டன்சி: டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

பார்படாஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை நியூசீலாந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 293 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 317 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 2வது இன்னிங்ஸில் கேன் வில்லியம்சனின் சவலான 161 ரன்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற சுமார் 98 ஓவர்களில் 308 ரன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் நேற்று 254 ரன்களுக்குச் சுருண்டது.

மெக்கல்லம் தைரியமாக டிக்ளேர் செய்தார். அது அந்த அணியின் வெற்றியில் முடிந்துள்ளது. 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடரை 1-0 என்று வெற்றி பெற்ற பிறகு இப்போது தொடரை நியூசிலாந்து 2-1 என்று கைப்பற்றியுள்ளது.

நேற்று 5ஆம் நாள், சேதமடைந்த பார்படாஸ் பிட்சில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரெண்டு போல்ட் மற்றும் டிம் சவுதீ சிறப்பாக வீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அறிமுக ஆஃப் ஸ்பின்னர் மார்க் கிரெய்கிற்கு இது ஒரு நல்ல முதல் டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது அவரும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மேகமூட்டமான வானிலையால் பந்துகள் ஸ்விங் ஆனது. இதனை இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நன்றாகப் பயன்படுத்தி துவக்க சேதத்தை ஏற்படுத்தினார். ஃபார்மில் உள்ள கிரெய்க் பிராத்வொயிட் மற்றும் கிர்க் எட்வர்ட்சை சொற்ப ரன்களுக்கு வீழ்த்த, அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லை டிம் சவுதீ பவுல்டு செய்தார். கெய்ல் 11 ரன்கள் எடுத்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் டேரன் பிராவோ 4வது விக்கெட்டுக்காக 50 ரன்கள் சேர்த்தனர். அப்போது மார்க் கிரெய்க் சந்தர்பாலை ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். 155 டெஸ்ட்களில் சந்தர்பால் முதன் முறையாக ஸ்டம்ப்டு அவுட் ஆனார். அதே போல் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் செய்யும் முதல் டெஸ்ட் ஸ்டம்பிங்கும் இதுவே. டேரன் பிராவோ 40 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த நிலையில் ரிவர்ஸ் ஸ்விங்கை அபாரமாகக் கையாண்ட டிம் சவுதீயின் பந்தைத் தேவையில்லாமல் ஒரு டிரைவ் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராம்தின் விக்கெட்டையும் சவுதீ வீழ்த்தினார்.

உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பிறகு 4 விக்கெட்டுகளை தேநீர் இடைவேளைக்கு முன்பாக இழந்தது.

144/7 என்ற நிலையில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷேன் ஷில்லிங்ஃபோர்ட் நின்று ஆடினர். 22 ஓவர்கள் இவர்கள் விக்கெட்டை விடாமல் ஆடி ஸ்கோரை 221 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 52 ரன்கள் எடுத்த ஜேசன் ஹோல்டர் ஆஃப் ஸ்பின்னர் கிரெய்க் பந்தில் பவுல்டு ஆனார்.

சுலைமான் பென் விக்கெட்டை வாக்னர் வீழ்த்த, நம்பர் 11 பேட்ஸ்மென் ஜெரோம் டெய்லரை டிரெண்ட் போல்ட் எல்.பி.டபிள்யூ செய்தார். ஆட்டம் முடிய இன்னும் 13 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் மெக்கல்லம்மின் தளராத கேப்டன்சியினால் நியூசிலாந்து ஒரு அரிய அயல் நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியைச் சாதித்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 186 ரன்களில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் எழுச்சியுற்று இரண்டாவது இன்னிங்ஸில் மழை அச்சுறுத்தலை தனது சிக்சர் மழையால் முறியடித்த கிறிஸ் கெய்ல் வெற்றி பெறச் செய்தார்.

நியூசிலாந்தின் அயல்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகள்:

2014: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2-1 வெற்றி

2002: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1-0 வெற்றி

1999: இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் 2-1 என்று வெற்றி.

1986: இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் தொடரில் 1-0 என்று வெற்றி.

1985-86: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்று வெற்றி. இந்தத் தொடரில்தான் நியூசிலாந்தின் வேகப்பந்து மேதை ரிச்சர்ட் ஹேட்லி 3 டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

1983-84: இலங்கையில் 2-0 வெற்றி.

1969-70: பாகிஸ்தானில் 1-0 வெற்றி.

இந்தத் தொடரில் இன்னும் 2 இருபது ஓவர் கிரிக்கெட் மீதமுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கேன் வில்லியம்சன் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x