3-வது டெஸ்டை வென்றது இந்தியா: 2-0 முன்னிலை பெற்றது

3-வது டெஸ்டை வென்றது இந்தியா: 2-0 முன்னிலை பெற்றது
Updated on
2 min read

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மொஹாலியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்தியா, 103 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆட்டத்தின் 4-வது நாளான இன்றே 21 ஓவர்களுக்குள் எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

236 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை முடித்த இங்கிலாந்து அணி, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் பந்துவீச்சைத் தொடங்கியது. குறைந்த இலக்கே இருப்பதால் கண்டிப்பாக விக்கெட் இழப்பின்றி வெற்றி பெறவே இந்தியா விரும்பியிருக்கும். ஆனால் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், வோக்ஸ் வீசிய இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

அடுத்து புஜாரா களத்தில் இருக்கும் பார்த்திவ் படேலுடன் இணைந்தார். எதிர்பார்த்ததை விட இந்த இணை வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக படேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விளாசினார்.

சிறப்பாக ஆடிய படேல் 39 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் வர, வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் புஜாரா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கோலி களமிறங்க அடுத்த 2 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பார்த்தீவ் படேல் 67 ரன்களுடனும், கோலி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஷமியின் பவுன்சர்களும் காயத்தை வென்ற ஹமீதும்

முன்னதாக >உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் இருந்த ஹமீது, வோக்ஸ் இணை சுதாரித்து ஆடி ரன் சேர்த்தது. 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்திருந்த வோக்ஸ், ஷமி வீசிய ஓவரின் முதல் பந்தை ஹெல்மெட்டில் வாங்கினார். அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டதும் ஆட்டம் தொடர்ந்தது. அடுத்த பந்து மீண்டும் ஷார்ட் பிட்ச் அளவில் வர அதை சமாளிக்கத் முடியாத வோக்ஸ் விக்கெட் கீப்பர் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆட வந்த ரஷீத் முதல் பந்தை லெக் திசையில் அடித்தாலும் ரன் எடுக்கமுடியவில்லை. அடுத்த பந்தை ஷமி மீண்டும் ஷார்ட் பிட்ச் அளவில் வீச ரஷீத் அதை ஃபைன் லெக் பகுதிக்கு தூக்கி அடித்தார். அங்கு நின்று கொண்டிருந்த யாதவ் கைகளுக்கு பந்து சிரமிமின்றி வந்து சேர்ந்தது.

கடைசியாக ஆண்டர்சன் களமிறங்கி சிறுது நேரம் ஹமீதுக்கு இணையாக ஆடினார். ஹமீது, காயம் காரணமாக தாமதமாக களமிறங்கினாலும், மிகச் சிறப்பாக ஆடி 147 பந்துகளில் அரை சதம் கடந்தார். பெரும்பாலும் ஆண்டர்சனை சந்திக்க விடாமல் தானே பல பந்துகளை சந்தித்தார். துரதிர்ஷ்டவசமாக அஸ்வின் ஓவரில் 2 ரன்கள் எடுக்க முற்பட்ட போது ஆண்டர்சன் ரன் அவுட்டாக, இங்கிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்று, 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹமீத் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 8ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in