

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பேனர்களும் போஸ்டர்களும் மெல்போர்ன் நகர வீதிகளில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான புரோமோஷனின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளன. அது நெட்டிசன்கள் கவனத்திற்கு வர சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
எதிர்வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. பெரும்பாலான அணிகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்தப் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. அந்த நகரம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது. டி20 உலகக் கோப்பையின் புரோமோஷனின் ஒரு பகுதியாக விராட் கோலி உட்பட பன்னாட்டு கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் போஸ்டர்களும் பேனர்களும் மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ளன. அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“எங்கு சென்றாலும் நம் கண்களில் புலப்படும் ஒருவராக கோலி உள்ளார்”, “கிரிக்கெட் உலகின் முகம்”, “கோலி, அகில உலக சூப்பர் ஸ்டார்”. “அவரது ஆட்டத்தின் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள் வைத்துள்ள ஆர்வத்தின் வெளிப்பாடு” என ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, கருத்து தெரிவித்துள்ளனர்.