

திருவனந்தபுரம்: தனது செய்கையால் கேரள மக்களின் இயங்களை வென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ். அவர் அப்படி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது. அதற்காக இந்திய அணி தற்போது அங்கு முகாமிட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றிருந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்கள் சிலர் சஞ்சு சாம்சனின் பெயரை முழங்கியபடி இருந்தனர். அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் நாளைய போட்டியின்போது அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ள டி-ஷர்ட்டை அணிந்து போட்டியை பார்க்க வருவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில், பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவ், தனது போனில் சஞ்சு சாம்சனின் போட்டோவை ரசிகர்களை நோக்கி காட்டியுள்ளார். அதோடு ‘தம்ப்ஸ் அப்’பும் சொல்லியுள்ளார். அதை ரசிகர்கள் தங்கள் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
தற்போது சஞ்சு சாம்சன், நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். அவர் தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.