

சென்னை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 வயதான தீபகே ஹூடா, இந்திய அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 9 இன்னிங்ஸில் பேட் செய்து 293 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதற்கான போட்டியில் இவரும் ஒருவராக உள்ளார். ஆஃப் பிரேக் பவுலரும் கூட.
இவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக வரும் 28-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்.
அதே போல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் விளையாடவில்லை. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ள காரணத்தால் இதில் பங்கேற்கவில்லை.