மன்கட் அவுட் சர்ச்சை: களத்தில் நடந்ததை விவரித்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா

மன்கட் அவுட் சர்ச்சை: களத்தில் நடந்ததை விவரித்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மா
Updated on
2 min read

சர்ச்சைக்குள்ளான மன்கட் அவுட் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை தீப்தி சர்மா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சர்ச்சை வெடித்திருந்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தது. இதில் டி20 தொடரை இழந்த இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதில் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 169 ரன்களை எடுத்தது.

170 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. இருந்தும் அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டான சார்லி டீனை ரன் அவுட் செய்திருந்தார் தீப்தி சர்மா. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சார்லியை தீப்தி ரன் அவுட் செய்திருந்தார். கிரிக்கெட் விதிப்படி இது செல்லும். இருந்தாலும் இதனை சிலர் ஏற்பதில்லை. வரும் 1-ம் தேதி முதல் ஐசிசி கிரிக்கெட் விதிகளின் படி இது ரன் அவுட் என அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தான் தற்போது இங்கிலாந்து தரப்பு சர்ச்சை ஆக்கியுள்ளது.

“அது எங்கள் திட்டம் தான். ஏனெனில் அவர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றார். அது குறித்து அவரிடம் சில முறை எச்சரித்து இருந்தோம். ஆனால் அவர் அதனை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு அவுட் செய்தோம். இதில் தவறு ஏதும் இல்லை” என தீப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது ஆதரவை தீப்திக்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி தான் இந்திய அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமியின் கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்கட் அவுட் என்றால் என்ன? - இந்த மன்கட் அவுட் முறை உருவான கதை சுவாரஸ்யமானது. 1947-ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய பவுலர் வினு மன்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் ரன் அவுட் செய்தார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதே பில் பிரவுனை, மன்கட் இப்படி ரன் அவுட் செய்தார். இதையடுத்து விளையாட்டின் மாண்பை மன்கட் நாசம் செய்துவிட்டார் என்று அப்போது ஊடகங்கள் அவருக்கு எதிராக விமர்சனம் செய்தன. ஆனால், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், வினு மன்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிறகு இந்த ரன் அவுட் முறை, வினு மன்கட் பெயரிலேயே, மன்கட் அவுட் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in