நான் பந்தின் தன்மையை மாற்றியிருந்தால் ஐசிசி என்னிடம் பேசியிருக்கும்: விராட் கோலி விளக்கம்

நான் பந்தின் தன்மையை மாற்றியிருந்தால் ஐசிசி என்னிடம் பேசியிருக்கும்: விராட் கோலி விளக்கம்
Updated on
1 min read

பந்தின் தன்மையை மாற்றியிருந்தால் ஐசிசி என்னிடம் பேசியிருக்கும் என்று பந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விராட் கோலி.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை செயற்கையாக மாற்றியதாக விராட் கோலி பற்றி செய்தி வெளியானது. இது குறித்து கோலி கூறும்போது ‘சிறிதளவும் உண்மையில்லை’ என்றார்.

இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் விராட் கோலியிடம் பந்து சேதம் பற்றி கேள்வி எழுப்பிய போது, “நேர்மையாகக் கூற வேண்டுமெனில் தொடரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய செய்திகள் வெளியாவதாகக் கருதுகிறேன். தென் ஆப்பிரிக்கா தொடரை வென்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் இது நிகழ்ந்தது (டுபிளெசிஸ் விவகாரம்), ராஜ்கோட்டில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் விசாகப்பட்டணத்தில் பெற்ற வெற்றிக்கு பின்னர்தான் கூறப்படுகிறது.

மேலும் இது பற்றி செய்தித்தாளில் வருபனவற்றை விட ஐசிசி என்ன முடிவெடுக்கிறது என்பதுதான் என்னைப் பொறுத்தவரை விஷயம். கிரிக்கெட் வீரர்களாக ஐசிசி-யை மதிக்கிறோம். நான் செய்தித்தாள்கள் படிப்பதில்லை எனவே குற்றச்சாட்டுகள், ஊகங்கள் பற்றி நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. மேலும் இதைப்பற்றி என்னிடம் யாரோ கூறும்போது நான் சிரித்து இதனை ஒதுக்கித் தள்ளினேன். சிலர் தொடரிலிருந்து கவனத்தை திசைத் திருப்ப விரும்புகின்றனர். அவர்களுக்கு குட்லக். ஆனால் நாங்கள் முழுக்க தொடரில் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார் உறுதியாக. ஆனால் பிரிட்டிஷ் பத்திரிகையாளருக்கு திருப்தி ஏற்படவில்லை போலும், அவர் மேலும் ஒரு கேள்வி கேட்டார்:

“டுபிளெசிஸ் செய்ததை நீங்கள் செய்கிறீர்களா?” என்றார். இதற்கு கோலி அமைதியாக, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

அனில் கும்ப்ளே கூறும்போது, “நாங்கள் இத்தகைய கதைகளுக்கு முக்கியத்துவன் கொடுப்பதில்லை, ஊடகங்கள் என்ன விரும்புகிறதோ அதை எழுதிக்கொள்ளட்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in