Published : 26 Sep 2022 06:20 AM
Last Updated : 26 Sep 2022 06:20 AM

‘மகளிர் கிரிக்கெட் சகாப்தம்’ - ஜூலனுக்கு பிசிசிஐ புகழாரம்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் சகாப்தம் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜூலன் கோஸ்வாமியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புகழாரம் சூட்டியுள்ளது. 2002-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் ஜூலன் கோஸ்வாமி, நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

முன்னதாக கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில் 'டாஸ்' போடும் நிகழ்ச்சிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடன் அவரை அழைத்து சென்றார். போட்டியின்போது அவர் பேட்டிங் செய்ய வருகையில் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் வரிசையாக நின்று அவரை வரவேற்றனர். இதேபோல் பீல்டிங் செய்ய களம் இறங்குகையில் கோஸ்வாமிக்கு இந்திய அணி வீராங்கனைகள் மைதானத்தில் வரிசையாக நின்று கைதட்டி உற்சாகம் செய்து கவுரவப்படுத்தினர்.

ஜூலன் கோஸ்வாமி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்களையும், 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 255 விக்கெட்களையும், 68 சர்வதேச மகளிர் டி-20 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் டெஸ்டில் 291 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,228 ரன்களும், டி20 போட்டிகளில் 405 ரன்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில் இவரது ஓய்வு குறித்து பிசிசிஐ நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ஜூலன் கோஸ்வாமியின் ஓய்வு மூலம் மகளிர் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. மிகச் சிறந்த இந்திய வீராங்கனைகளில் ஒருவர் ஜூலன்" என புகழாரம் சூட்டியுள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜூலன் அறிவித்துள்ள நிலையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெரும் வெற்றியைக் கண்டார்" என்றார். இவர் 2007-ம் ஆண்டுக்கான ஐசிசி 'சிறந்த வீராங்கனை' விருதைப் பெற்றுள்ளார். மேலும், அர்ஜுனா விருது (2010) மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் (2012) இவர் பெற்றுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x