

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரன்களை எடுக்க முடியாமல் அணியில் கேள்விக்குறியான ஆஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸ், ஷெஃபீல்டு ஷீல்டு உள்நாட்டு போட்டியில் பவுன்சரில் பின்மண்டையில் அடிவாங்கி மைதானத்திலேயே சாய்ந்தார்.
ஆனால் பெரிய ஆபத்தில்லாமல் மீண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஆடம் வோஜஸுக்கு தலைவலி மட்டும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மேனியா அணிக்கு எதிராக மேற்கு ஆஸ்திரேலிய அணி ஆடி வந்த நிலையில் இந்த அணியின் ஆடம் வோஜஸ் 16 ரன்களில் இருந்த போது கேமரூன் ஸ்டீவன்சன் என்பவரது பவுன்சரை தவிர்க்கும் முயற்சியில் தலையைத் திருப்ப பின்பகுதியில் வாங்கினார். உடனடியாக கீழே சரிந்து மைதானத்தில் மல்லாந்தார் ஆடம் வோஜஸ், தலையை தன் கைகளால் அவர் பிடித்துக் கொண்டார்.
மைதானத்திற்குள் வந்த மருத்துவ உதவிக் குழு அவருக்கு முதலுதவி செய்து பெவிலியனுக்கு அழைத்துச் சென்றது. பிறகு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு சிறிய அளவில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியில் அவர் இனி ஆட முடியாது.
ஆடம் வோஜஸின் தென் ஆப்பிரிக்க தோல்விகளுக்குப் பிறகு அவரது இடம் கேள்விக்குறியானது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கடந்த ஹோபார்ட் டெஸ்ட் போட்டியுடன் முடிவுக்கு வந்ததாகவே பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் மோசமாக ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வலியுறுத்தப்பட்டனர். ஆடம் வோஜஸ் இதனையடுத்தே ஷெஃபீல்ட் ஷீல்டு போட்டியில் ஆடினார்.
பிலிப் ஹியூஸ் பவுன்சரில் காயம் பட்டு அகால மரணமடைந்து 2 ஆண்டுகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் நிலையில் ஆடம் வோஜஸ் தலையில் அடிபட்டது பெரும் பரபரப்பையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.