

டென்னிஸ் சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது கடைசி ஆட்டத்தில் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில்உள்ள ஓ2 அரங்கில் லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடிய இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஐரோப்பிய அணிக்காக களமிறங்கிய பெடரர், நடால் ஜோடி, உலக அணியை சேர்ந்த அமெரிக்காவின் ஜாக் சோக், பிரான்சஸ் தியாபோஜோடியை எதிர்கொண்டது.
முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த பெடரர் கடந்த 14 மாதங்கள் எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண அனைவரும் ஆவலுடன் இருந்தனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பெடரர் சிறப்பாகவே ஆட்டத்தை தொடங்கினார். முழுவேகத்துடன் அவரால் விரைவாக செயல்பட முடியவில்லை என்றாலும் டென்னிஸ் மட்டை வழக்கம் போல் ஜாலம் காட்டியது. முதல் செட்டை 6-4 என வெற்றிகரமாக தனது போர்ஹேண்ட் மூலம் கைப்பற்ற உதவினார். எனினும் 2-வது செட்டைமிக நெருக்கமாக 6-7 என பறிகொடுத்தது பெடரர், நடால் ஜோடி.
பெடரரின் புகழ்பெற்ற டென்னிஸ் வாழ்க்கை பயணத்தின் முடிவு இரண்டாவது செட்டின் இறுதியில் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்குக்கு சென்றது. பெடரரின் சர்வீஸில் 9-8 என்ற மேட்ச் பாயிண்ட் இருந்தபோதிலும், அவர்களது தோல்வி தவிர்க்க முடியாமல்போனது. முடிவில் இந்த ஆட்டத்தில் 6-4, 6-7, 9-11 என்ற செட் கணக்கில் பெடரர், நடால் ஜோடி தோல்வி அடைந்தது.
தொடர்ந்து ரோஜர் பெடரரின் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது பல உணர்ச்சிகரமான தருணங்களை காண முடிந்தது. முதலில் பெடரர் கண்ணீர் சிந்தினார். இதன்பிறகு அவர் அருகில் இருந்த நடாலும் அழ ஆரம்பித்தார். இரு பிரபல வீரர்கள் அருகருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தது ரசிகர்களை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்தது.
பெடரர் கூறும்போது, “எனது மனைவி மிர்கா நினைத்திருந்தால் என்னை நீண்ட காலத்துக்கு முன்பே டென்னிஸ் விளையாடவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் மிர்கா அதை செய்யவில்லை. தற்போது நினைவு கூர்ந்தாலும் இது வியப்பாக இருக்கிறது. அவருக்கு நன்றி. ரபேல் நடாலுடன் ஒரே அணியில் இணைந்து விளையாடியது சிறப்பாக இருந்தது. இங்கு விளையாடிய வீரர்கள், போட்டியை காண வந்த ரசிகர்கள், ஜாம்பவான்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
ரபேல் நடால் கூறும்போது, “ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டியைவிட்டு வெளியேறுவது என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி வெளியேறுவதை போன்று உணர்கிறேன். ஏனெனில் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எனக்கு அடுத்ததாக அல்லது எனக்கு முன்னால் அவர், இருந்துள்ளார். இதனாலேயே நான் உணர்ச்சி வசப்பட்டேன். இதை விவரிப்பது கடினம், ஆனால் இது அற்புதமான தருணம்’’ என்றார்.
டென்னிஸ் வாழ்க்கை பயணத்தின் கடைசி ஆட்டம் பெடரருக்கு சரியான பிரியாவிடையாக இல்லை. எனினும் 41 வயதில் டென்னிஸ் வாழ்க்கையை முழுமையாக நிறைவு செய்தே அவர், வெளியேறி உள்ளார். இதுகுறித்து பெடரர் கூறுகையில், “மீண்டும் விளையாடுவது எவ்வளவு அற்புதமானது என்பதை நான் களத்தில் நின்றபோது நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. இதுமுடிவு அல்ல, வாழ்க்கை தொடர்கிறது” என்றார்.
டென்னிஸ் உலகம் கண்டிராத சிறந்த ஆட்டங்களில் சிலவற்றை பெடரர் அவருக்கே உரித்தான பாணியில் அற்புதமாக விளையாடி உள்ளார். டென்னிஸ் போட்டிகளில் இருந்து பெடரர் ஓய்வுபெற்றாலும் சிறிது காலத்துக்கு அவரது இருப்பு உணரப்படும். பெடரரின் ஆட்ட யுக்திகளில் இருந்து கற்றுக்கொள்ள பல வீரர்கள் முயற்சித்துள்ளனர், மற்ற வீரர்கள் மீது அவரது செல்வாக்கு மறுக்க முடியாதது. ஆனால் அவரைபோல் யாரும் இருக்க மாட்டார்கள்.
அறுவை சிகிச்சையும் ஓய்வும்..
8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 அமெரிக்க ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெடரர் வென்றுள்ளார். 2021-ல் முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் பெடரர். ஆனால் அந்தக் காயத்திலிருந்து முழுவதுமாகக் குணமாவது சாத்தியம் இல்லை என்பதால் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். பல ஆண்டுகளாகத் தனக்கு கடும் சவால் அளித்த நடாலுடன் இணைந்து விளையாடி டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
ஆதிக்க நாயகன்..
2018-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை பெடரர் வென்ற போது, 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அப்போது நடால் 16 பட்டங்களையும் ஜோகோவிச் 12 பட்டங்களையும் மட்டுமே பெற்றிருந்தார்கள். அதன்பிறகு காயங்களால் அவதிக்குள்ளான பெடரரால் மேற்கொண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியவில்லை.
மாறாக நடாலும், ஜோகோவிச்சும் பந்தயத்தில் அவரை முந்தினர். இந்த வகையில் நடால் 22, ஜோகோவிச் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். இருப்பினும் 2003 முதல் 2007 வரை நடைபெற்ற 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 12 பட்டங்களை வென்று குவித்தார் பெடரர். இதுவே டென்னிஸ் உலகில் அவர் செலுத்திய ஆதிக்கத்தை பறைசாற்றும்.