

கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கேரள அணி கைப்பற்றியது. தமிழக அணி 2-ம் இடத்தை வென்றது.
தமிழ்நாடு தடகளச் சங்கம் சார்பில் 32-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த 2,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளில், 103 விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மொத்தம் 429 புள்ளிகளுடன் கேரள அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தமிழக அணி 413 புள்ளிகளுடன் 2-ம் இடத்தைக் கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் ஹரியாணா, தமிழக அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, கேரள அணிகளும் முதல் 2 இடங்களை வென்றன.
24 சாதனைகள்
இந்தப் போட்டியில் 24 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் 14 சாதனைகள் தேசிய அளவிலான சாதனைகளாகும். 10 சாதனைகள் தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகளில் முறியடிக் கப்பட்ட சாதனைகளாகும்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகளச் சங்கத் தலைவர் வால்டர் தேவாரம் பரிசு வழங்கினார். மாநிலப் பொருளாளர் சி.லதா, மாவட்டத் தலைவர் தங்கவேல், செயலர் சம்சுதீன், ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேல், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரித் தாளாளர் எம்.ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.