Published : 24 Sep 2022 05:17 AM
Last Updated : 24 Sep 2022 05:17 AM

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - அரை இறுதிக்கு முன்னேறினார் எரிகைசி, பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

அர்ஜூன் எரிகைசி

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா கால்இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் இந்தத் தொடரின் கால் இறுதி சுற்றில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, 15 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யோவுடன் மோதினார். 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளை வென்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற அர்ஜூன் எரிகைசி, அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் வியட்நாமின் லியம் குவாங் லீயுடன் மோதுகிறார் அர்ஜூன் எரிகைசி. லியம் குவாங் லீ தனது கால் இறுதி சுற்றில் 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹன்ஸ் நீமனை தோற்கடித்தார்.

பிரக்ஞானந்தா தனது கால் இறுதி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டைபிரேக்கருக்கு போட்டியை கொண்டு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா 42-வது காய் நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.

உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 3-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் லெவன் அரோனியனை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். முதல் ஆட்டத்தில் கார்ல்சன் தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்து நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். அரை இறுதியில் கார்ல்சன், 17 வயதான ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x