

கோவை: துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென் மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசினார் மேற்கு மண்டல அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கோவையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென்மண்டல அணி 2-வதுநாள் ஆட்டத்தில் 81 ஓவர்களில்7 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. ரவி தேஜா 26, சாய் கிஷோர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் மண்டல அணி மேற்கொண்டு 9 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்களையும் பறிகொடுத்தது. ரவி தேஜா 34, சாய் கிஷோர் 6, பாசில் தம்பி 1 ரன்னில் நடையை கட்டினர்.
முடிவில் அந்த அணி 83.1 ஓவரில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேற்கு மண்டலம் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 4, அதித் ஷேத் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
57 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு மண்டல அணி ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 244 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 209 ரன்களும், சர்ப்ராஸ்கான் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக பிரியங்க் பன்சால் 40, அஜிங்க்ய ரஹானே 15, ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்களில் ஆட்டமிழந்தனர். 319 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மேற்கு மண்டல அணிஇன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.