

சென்னை: நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா ஏ அணி.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து ஏ அணியானது 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 18.1 ஓவர்களில் அந்த அணி 74 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தவித்தது. ஷாட் போவ்ஸ் 10, ரச்சின் ரவீந்திரா 10, டேன் கிளவர் 4, ஜோ கார்ட்டர் 1, ராபர்ட் ஓ’டோனல் 22, டாம் புரூஸ் 0, சீயன் சோலியா 5, லோகன் வான் பீக் 1 ரன்களில் நடையை கட்டினர்.
9-வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் ரிப்பான், ஜோ வால்கர் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 89 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜோ வால்கர் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரஜத் பட்டிதரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்த சில ஓவர்களில் மைக்கேல் ரிப்பான், ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். 104 பந்துகளை சந்தித்த மைக்கேல் ரிப்பான் 61 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா ஏ அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4, குல்தீப் சென் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 168 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா ஏ அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரித்வி ஷா 17, ருதுராஜ் கெய்க்வாட் 41, ராகுல் திரிபாதி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 29, ரஜத் பட்டிதார் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.