

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தெருவோரம் ‘கல்லி’ கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இப்போது அது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக 86 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் அஸ்வின். அதன் மூலம் 3799 ரன்களும், 659 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சென்னை நகரில் தெருவோரம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து அவரும் ‘கல்லி’ கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோவையும் அவரே பகிர்ந்துள்ளார். ‘ஏரியா கிரிக்கெட்டை அடித்துக் கொள்ள எதுவும் இல்லை’ என கேப்ஷன் மூலம் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சுமார் 2 நிமிடங்கள் வரை ஓடும் அந்த வீடியோவில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வரும் அஸ்வின், ‘நான் ஒரு பந்து போடட்டுமா’ என்கிறார் அஸ்வின். அவர்கள் அனுமதி கொடுத்ததும் பந்து வீசி அசத்துகிறார். அதனை கவனித்த பயிற்சியாளர் ஸ்ரீதர், ‘இங்கும் கேரம் பந்துதான் வீசுகிறீர்கள்’ என தெரிவித்துள்ளார்.