Published : 22 Sep 2022 07:27 AM
Last Updated : 22 Sep 2022 07:27 AM
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சமீப வாரங்களில் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மொஹாலியில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பந்து வீச்சு செயல்திறன் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் 208 ரன்களை குவித்தும் எந்தவித தாக்கமும், வலுவும் இல்லாத பந்து வீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டுள்ளதன் மூலம் இந்திய அணியின் பந்து வீச்சு எந்த வகையில் சுணக்கம் கண்டுள்ளது என்பதை அறியலாம். புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல் ஆகியோர் கூட்டாக 8 ஓவர்களை வீசி 101 ரன்களை வழங்கினர். பந்து வீசிய 6 பேரில் அக்சர் படேல் மட்டுமே ஓவருக்கு சராசரியாக 4.23 ரன்களை விட்டுக்கொடுத்தார். மற்ற 5 பேருமே சராசியாக 11 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர்.
ரோஹித் சர்மா டி 20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதை தொடர்ந்து பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் இணைந்து முதற்கட்டமாக அணியில் வேரூன்றியிருந்த பழமைவாத பேட்டிங் அணுகுமுறையை மாற்றினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பேட்ஸ்மேன்களும் இணங்கி கடின முயற்சிகள் மேற்கொண்டு டி 20 போட்டிகளுக்கு தகுந்தவாறு தங்களது ஆட்டத் திறனை மாற்றிக் கொண்டு களத்தில் செயல்படுத்தினர். இதனை கடந்த சில ஆட்டங்களில் கண்கூடாக பார்க்க முடிந்தது. பேட்ஸ்மேன்களிடம் இருந்து மேம்படுத்தப்பட்ட மட்டை வீச்சு அணுகுமுறையும், திறனை செயல்படுத்தும் விதமும் அபாரமாக வெளிப்பட்டது.
பேட்டிங் அணுகுமுறையில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிட்டுகிறது என ராகுல் திராவிட்டும், ரோஹித் சர்மாவும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் பந்து வீச்சில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக தோல்வியடைந்த 3 ஆட்டங்களிலும் பேட்டிங்கில் பாதுகாக்கக்கூடிய அளவிலான பெரிய ஸ்கோர்களை எடுத்திருந்தது. இந்த 3 ஆட்டங்களிலும் இந்திய அணி பந்து வீச்சில் கடைசி 3 ஓவர்களில்முறையே 54, 42, 41 ரன்களை தாரைவார்த்திருந்தது.
இந்த 3 ஆட்டங்களிலும் பொதுவாக அமைந்தது புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு. ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில் இந்த 3 ஆட்டங்களிலும் புவனேஷ்வர் குமார் 19-வது ஓவரை வீசி முறையே 16, 14, 19 ரன்களை வாரி வழங்கினார். உண்மையில் 19-வது ஓவரை புவனேஷ்வர் குமாரை வீசச்செய்த முடிவில் தவறு இல்லைதான். ஏனெனில் பும்ரா இல்லாத நிலையில் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடியவராக இருப்பவர் புவனேஷ்வர்குமார்தான். இதனாலேயே அவருக்கு 19-வது ஓவர் வழங்கப்பட்டு வருகிறது.
புவனேஷ்வர் குமார் தனது டி 20 கிரிக்கெட் வாழ்க்கையில் 19-வது ஓவரில் அதிக ரன்களை வழங்கியது மேற்கூறிய இந்த 3 ஆட்டங்களில்தான். அதிலும் தொடர்ச்சியாக அமைந்தது அவருக்கு கூடுதல் வேதனையே. மொஹாலியில் அணியின் பந்து வீச்சு திட்டத்தில் இருந்து முதலில் விலகி சென்றது புவனேஷ்வர் குமார்தான். அவரது பந்தை பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கையாண்டு ரன்களைக் குவிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக மேத்யூ வேட், பீல்டர்கள் இல்லாத திசையை நோக்கி பல்வேறு முறை புவனேஷ்வர் குமாரின் பந்தை அடித்து நொறுக்கினார்.
மேலும் புவனேஷ்வர் குமார் சீராக 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசவில்லை. 4 ஓவர்களை வீசிய அவர், 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். சர்வதேச டி 20-ல் புவனேஷ்வர் குமார் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதன்முறை. டி 20 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் தொடர்ச்சியாக புவனேஷ்வர் குமார் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறிவரும் நிலையிலும் அவர், மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியம்தான்.
இது ஒருபுறம் இருக்க ஹர்ஷால் படேலும் பந்து வீச்சில் தேக்க நிலைக்கு சென்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், 4 ஓவர்களை வீசி 49 ரன்களை வழங்கினார். இதில் 18-வது ஓவரில் 22 ரன்களை விட்டுக்கொடுத்ததும் அடங்கும். ஷார்ட் பந்துகள்தான் ஹர்ஷால் படேலின் வலுவான ஆயுதம். ஆனால் அதை மேத்யூவேட் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். மொஹாலி ஆடுகளமானது ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களின் சூழ்நிலைக்கு சற்று ஒத்திசைவாக இருக்கக்கூடியது. இங்கேயே ஹர்ஷால் படேலின் வேகம் குறைந்த பந்துகளும் கூட பலன் அளிக்கவில்லை. இதில் இருந்து அவர், எவ்வாறு மீண்டு வருவார் என்பதும் கவலைதரக்கூடியதாக உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “நாங்கள் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கவில்லை. 208 ரன்கள், பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சிறப்பான ஸ்கோர்தான். களத்தில் பீல்டிங்கின் போது எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான முயற்சியில் பெரிய அளவில் இலக்கை கொடுத்தனர். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்கள் எடுக்க முடியாது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அந்த நிலைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அடுத்த ஆட்டத்துக்கு முன்னதாக நாங்கள், எங்களது பந்து வீச்சை கவனிக்க வேண்டும்” என்றார்.
ரோஹித் சர்மாவின் கருத்தை ஹர்திக் பாண்டியாவும் ஆமோதித்தார். ஹர்திக் பாண்டியா கூறும்போது, “பனிப்பொழிவு பிரச்சினை இல்லை. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. அவர்களை பாராட்ட வேண்டும். திட்டங்களையும், பந்துவீச்சையும் சரியாக செயல்படுத்தத் தவறிவிட்டோம்” என்றார்.
ஆஸ்திரேலியாவின் வெற்றியில் மேத்யூவேட் 21 பந்துகளில் விளாசிய 45 ரன்களும், கேமரூன் கிரீன் 30 பந்துகளில் விளாசிய 60 ரன்களும் முக்கிய பங்கு வகித்தன. அதிலும் இறுதிக்கட்டத்தில் 24 பந்துகளில் 55 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 4 பந்துகளை மீதம் வைத்து இந்தியாவை வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. இது கடினமான சூழ்நிலையில் பந்து வீச்சால் ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கான சிறந்த கருவிகள் இந்தியாவிடம் இல்லை என்பதை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் டி 20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT