

கிறைஸ்ட்சர்ச்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 35 வயதான அதிரடி தொடக்க வீரரான மார்ட்டின் கப்திலும் அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் விளையாட உள்ள வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் மார்ட்டின் கப்தில்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து 3 மாற்றங்களை மட்டுமே நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.
இந்த வகையில் கைல் ஜேமிசன், டோட் ஆஸ்லே, டிம் ஷெய்பர்ட் ஆகியோர் நீக்கப்பட்டு ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல்,லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளனர். டி 20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், கிளென் பிலிப்ஸ், டேவன் கான்வே, டேர்லி மிட்செல், பின் ஆலன், மார்க் சாப்மன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜிம்மி நீஷாம், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், ஆடம் மில்ன், இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர்.