Published : 21 Sep 2022 05:53 AM
Last Updated : 21 Sep 2022 05:53 AM

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா ஆதிக்கம்

சென்னை: மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது தொடராக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உட்பட 16 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

2-வது நாளான நேற்று முன்தினம் இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசி தனது 5-வது சுற்றில் அமெரிக்காவின் ஹன்ஸ் நீமனை தோற்கடித்தார். அதேவேளையில் 6-வது சுற்றில் அமெரிக்காவின் லெவன் அரோனியனிடம் தோல்வியடைந்தார். தொடர்ந்து நடைபெற்ற 7-வது சுற்றில் பிரக்ஞானந்தாவை எதிர்த்து விளையாடினார் அர்ஜூன் எரிகைசி. இந்த ஆட்டம் 67-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. குரோஷியாவின் இவான் சாரிக்கிற்கு எதிரான ஆட்டத்தையும் அர்ஜூன் எரிகைசி டிராவில் முடித்தார்.

8-வது சுற்றில் பிரக்ஞானந்தா, கார்ல்சனுடன் மோதினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் 67-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. முன்னதாக பிரக்ஞானந்தா 5-வது சுற்றில் போலந்தின் ராடோஸ்லாவுக்கு எதிரான ஆட்டத்தையும் டிரா செய்திருந்தார். அடுத்த சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.

2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அர்ஜூன் எரிகைசி 17 புள்ளிகளுடன் முதலிடம் வகித்தார். பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

கார்ல்சன் தனது 6-வது சுற்றில் அமெரிக்காவின் நீமனுடன் மோதினார். இதில் 2 நகர்வுகளே முடிந்த நிலையில் கார்ல்சன் விலகினார். இதனால் நீமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் தொடரில் கார்ல்சனை, 19 வயதான நீமன் தோற்கடித்திருந்தார். இதன் பின்னர் அந்தத் தொடரில் பாதியிலேயே கார்ல்சன் வெளியேறினார். இதற்கு காரணம் நீமன், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x