

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் 22-வது ஆண்டாக வரும் ஜனவரி 2 முதல் 8 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் முன்னணி வீரர்களில் குரோஷியாவின் மரின் சிலிச் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்பெயினின் ராபர்ட்டோ அகுட் 14-வது இடத்திலும், மற்றொரு ஸ்பெயின் வீரரான ஆல்பர்ட் ரேமோஸ் 27-வது இடத்திலும் உள்ளனர். சுலோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் 35-வது இடத் திலும், குரோஷியாவின் போர்னா கோரிச் 48-வது இடத்திலும் உள்ளனர். இந்த முறை தரவரிசை யில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் 6 வீரர்கள் பங்கேற்பதால் போட்டி கடும் சவாலாக இருக்கக்கூடும்.
இதேபோல் முந்தைய காலத்தில் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்த ராப்ரீடோ (ஸ்பெயின்), மிகைல் யூஸ்னி (ரஷியா) ஆகியோரும் பங்கேற்பது ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் ராம்குமார் ராமநாதனுக்கு வைல்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தேசிய சாம்பியனான ராம்குமார், டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இந்தியாவின் இரண்டாம் நிலை வீரராக உள்ளார்.
சென்னை ஓபனில் பங்கேற்கும் வீரர்கள்
மரின் சிலிச்(குரோஷியா), ராபர்ட்டோ அகட் (ஸ்பெயின்), ஆல்பர்ட் ரேமோஸ் (ஸ்பெயின்), மார்ட்டின் கிளிஸான் (சுலோவேகியா), பெனாய்ட் பேர் (பிரான்ஸ்), போர்னா கோரிச் (குரோஷியா), டாமி ராப்ரீடோ (ஸ்பெயின்), மிகைல் யூஸ்னி (ரஷியா), யென் சன் லூ (தைவான்), கார்ஸியா லோபஸ் (ஸ்பெயின்), டமிர் தும்ஹுர் (போஸ்னியா), கான்ஸ்டான்டின் கிராவ்சுக் (ரஷியா), கேஸ்டோ எலியாஸ் (போர்ச்சுகல்), தியாகோ மான்டீரோ (பிரேசில்), ரென்ஸோ ஆலிவோ (அர்ஜென்டினா), ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்), டூடி செலா (இஸ்ரேல்), டுஸான் லஜோவிச் (செர்பியா), ராடு அல்பாட் (மால்டோவா), ரோஜெரியோ சில்வா (பிரேசில்), டேனில் மெத்வதேவ் (ரஷியா), ராம்குமார் ராமநாதன் (இந்தியா).