இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்
Updated on
1 min read

இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே ஷமி பந்துவீச்சில் குக் கொடுத்த கேட்சை ஜடேஜா தவறவிட்டார். இதற்குப் பின் சற்று சுதாரித்த இங்கிலாந்து அணி சீராக ரன் சேர்த்து வந்தது.

சரியாக பத்தாவது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்து, ஆடிக்கொண்டிருந்த ஹமீத் நினைத்ததை விட அதிகமாக பவுன்ஸ் ஆக, பந்து அவரது கையில் பட்டு ஸ்லிப் பகுதிக்கு பறந்தது. ரஹானே கேட்ச் பிடிக்க, ஹமீத் 9 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே ஷமியின் பந்தை சந்தித்த குக் மீண்டும் கேட்ச் தர, இம்முறை மிட் விக்கெட் பகுதியில் இருந்த அஸ்வின் அதை தவறவிட்டார். தொடர்ந்து சில ஓவர்களில் ஜோ ரூட், யாதவ்வின் சுழலில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரை வீச வந்த அஸ்வின் முதல் பந்திலேயே குக்கை வெளியேற்றி தான் விட்ட கேட்சுக்கு சரிகட்டிக் தேடி கொண்டார்.

தொடர்ந்து களமிறங்கிய மோயின் அலி முதலில் சற்று நிதானித்தாலும் யாதவ் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து அதிரடி காட்டினார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஷமியின் பவுன்சரை தூக்கி அடிக்க முயல அது ஃபைன் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜய்யின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தற்போது பேர்ஸ்டோ (20 ரன்கள்) மற்றும் ஸ்டோக்ஸ் (5 ரன்கள்) களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in