Published : 19 Sep 2022 01:54 PM
Last Updated : 19 Sep 2022 01:54 PM
மொஹாலி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது ஆட்டம், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி மொஹாலிக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவுக்கு சவாலானதுதான். இந்தப் போட்டிக்காக நாங்கள் சிறப்பாகத் தயாராகி வருகிறோம்.
இதற்காக ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள 3 சர்வதேச டி20 போட்டிகள் எங்களுக்கு மிகப்பெரிய பயிற்சியாக அமையும். டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல். ராகுல் களமிறங்குவது நிச்சயம். ஒவ்வொரு வீரரையும் எந்த இடத்தில் களமிறங்கச் செய்வது என்பதில் அணி நிர்வாகம் முழுமையான தெளிவைப் பெற்றுள்ளது.
சில போட்டிகளில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்குவது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும், நானும் ஆலோசனை நடத்தியுள்ளோம். கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் என்ன செய்தார் (தொடக்க வீரராக) என்பது அனைவருக்கும் தெரியும். விராட் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டியில் ராகுல், என்னுடன் தொடக்க வீரராக களமிறங்குவார். அவரது நடவடிக்கையை நாங்கள் அடிக்கடி கவனித்து வருகிறோம்.
அவர் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர். கடந்த 2 அல்லது 3 வருடங்களில் அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் தெரியும். அவரது செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. அவரை தொடக்க வீரராக களமிறக்குவதில் எங்களுக்கு முழுமையான தெளிவு உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களுக்கு மேட்ச் வின்னர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT