91 ரன்களில் ஸ்மிருதி அவுட்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

ஸ்மிருதி மந்தனா.
ஸ்மிருதி மந்தனா.
Updated on
1 min read

ஹோவ்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் தனது விக்கெட்டை இழந்திருந்தார். அவர் சதம் பதிவு செய்யும் வாய்ப்பை மிஸ் செய்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் வகையில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. இந்த நிலையில் ஒருநாள் தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.

ஹோவ் நகரில் உள்ள கவுண்ட்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ஷெஃபாலி வெர்மா 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த யாஸ்திகா பாட்டியா உடன் இணைந்து 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மிருதி மந்தனா. 50 ரன்கள் எடுத்து பாட்டியா வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் உடன் 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மிருதி.

91 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை ஸ்மிருதி இழந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே போட்டியில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் இது. 44.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் 74 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in