துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தினார் சாய் கிஷோர்
சேலம்: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் வடக்கு மண்டலத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் மண்டல அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் 7 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சேலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 172.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 630 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய வடக்கு மண்டல அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 67 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 40, யாஷ் துல் 39, துருவ் ஷோரே 28, மனன் வோரா 27 ரன்கள் சேர்த்தனர்.
தென் மண்டல அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் 25 ஓவர்களை வீசி, 4 மெய்டன்களுடன் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். 423 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் மண்டல அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ரோஹன் குன்னும்மாள் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 53, ரவி தேஜா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
