

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 138 ரன்கள் விளாசினார்.
அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 76 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டு பிளெஸ்ஸிஸ் 118, ஸ்டீபன் குக் 40 ரன்கள் எடுத்தனர்.
முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 3, ரென்ஷா 8 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரென் ஷா 10, டேவிட் வார்னர் 11, கேப்டன் ஸ்மித் 59, ஹென்ட்ஸ்கோம்ப் 54, மெடின்சன் 0, மேத்யூவ் வேட் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிலைத்து நின்று விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 5-வது சதத்தை நிறைவு செய்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 102 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. கவாஜா 138, மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கைல் அபோட் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் முன்னிலை பெற் றுள்ள நிலையில் கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்கிறது.