

மும்பை: பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் (2017-2021) ரவி சாஸ்திரி. சர்வதேச கிரிக்கெட்டில் களத்தில் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வரும் பணிகளை கவனித்து வருகிறார். தலைமை பயிற்சியாளர் பதவியில் அவர் இருந்தபோது இந்திய அணிஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரை வென்றது சாதனையாக பார்க்கப்பட்டது.
பயிற்சியாளராக பணிபுரிந்த காலத்தில் விராட் கோலியுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தார் சாஸ்திரி. தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிறகு மீண்டும் வர்ணனை பணியை அவர் மேற்கொண்டுள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சீசனுக்கான மேட்ச் கமிஷனராக உள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக பேசியுள்ளார். அதில், "ஏழு ஆண்டுகளாக, நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். எதை செய்தாலும், அந்த விஷயத்தை உண்மையாக செய்வேன். ஆனால், இப்போது பயிற்சியாளராக எனது காலம் முடிந்துவிட்டது. இப்போது நான் கிரிக்கெட் விளையாட்டை வெகு தொலைவில் இருந்து பார்த்து ரசிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.