

சென்னை: சென்னை பெரம்பூரில் உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டியில் கேரி கிர்ஸ்டன் கிரிக்கெட் அகாடமியை ஹாட்ஃபுட் ஸ்போர்ட்ஸின் ஒத்துழைப்போடு தி ஸ்ரீராம் யுனிவெர்சல் ஸ்கூல் தொடங்கி உள்ளது. மேலும் கூடுதலாக தென் இந்தியாவின் முதல் பேடல் டென்னிஸ் ஆடுகளமும் தொடங்கப்பட்டுள்ளது.
கேரி கிர்ஸ்டன் அகாடமியில் 10 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு முகாமில் கேரி கிர்ஸ்டன் கலந்துகொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி ஆலோசனைகள் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேடல் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் பகுல் ராஜ்புட் கூறும்போது, “ ஸ்குவாஷ், டென்னிஸ் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதுதான் பேடல் டென்னிஸ். இந்த போட்டியை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். தென் இந்தியாவில் சென்னையில்தான் முதன் முறையாக இந்த ஆடுகளத்தை அமைத்துள்ளோம். இந்தியாவில் இது 3-வது ஆடுகளமாகும். தற்போது இந்தியாவில் இந்த விளையாட்டு முன்னேற்றம் காண்பதற்கான தளம் உள்ளது” என்றார்.