மொகாலியில் இன்று 3-வது டெஸ்ட் தொடக்கம்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து

மொகாலியில் இன்று 3-வது டெஸ்ட் தொடக்கம்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து
Updated on
2 min read

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் ராஜ் கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. விசாகப்பட்டி னத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் தொடரில் 1-0 என விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

வெற்றி உற்சாகத்தில் இந்திய அணி யினர் மொகாலி போட்டியை சந்திக்கின்ற னர். இரு போட்டியிலும் இங்கிலாந்து அணியும் சிறப்பாகவே விளையாடியது. விசாகப்பட்டினம் போட்டியில் அந்த அணியினர் தடுப்பாட்ட யுக்தியை அதிகம் நம்பியதாலேயே தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்திய அணியில் விருத்திமான் சாஹா காயம் அடைந்துள்ளதால் இந்த போட்டி யில் அவருக்கு பதிலாக 31 வயதான பார்த்தீவ் படேல் களமிறங்குகிறார். 8 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ் ஸிஸ் போன்று விராட் கோலியும் பந்தை பளபளபாக்க சூயிங்கம் தடவியதாக இங்கிலாந்து மீடியாக்கள் சர்ச்சையை கிளப்பியதால் இந்த போட்டியில் கோலி சற்று கவனமாக செயல்படக்கூடும். மேலும் டு பிளெஸ்ஸிஸ் போன்று கோலியும் சதம் அடித்து பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி இந்த தொடரில் இதுவரை 337 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் கோலியின் ரன்குவிப்பு முக்கிய பங்கு வகித்தது. இதேபோல் இரண்டு சதங்களுடன் 262 ரன்கள் சேர்த்துள்ள சேதேஷ்வர் புஜாராவும் நல்ல பார்மில் உள்ளார். இவர்கள் இருவரிடம் இருந்து மீண்டும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி 488 மற்றும் 455 ரன்கள் குவித்த போதிலும் பேட்டிங்கில் விராட் கோலி, முரளி விஜய், புஜாரா ஆகியோரது பங்களிப்பே அதிகம் இருந்தது. பின்கள வரிசையில் அஸ்வினும் உதவியாக இருந்தார்.

மெல்போர்ன், லார்ட்ஸ் மைதானங் களில் சதம் அடித்த ரஹானே உள்ளூர் தொடரில் தடுமாறி வருகிறார். துணை கேப்டனான அவர் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 63 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் அவர் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.

இதேபோல் அவசர கதியில் அணியில் சேர்க்கப்பட்ட கே.எல்.ராகுலும் 2-வது டெஸ்ட்டில் சோபிக்க தவறினார். தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவர் இந்த டெஸ்ட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

மொகாலி மைதானம் முதலில் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் ஆட்டத்தின் பிற்பகுதியில் சுழலுக்கு கைகொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போல அஸ்வின் விக்கெட் வேட்டையாட காத்திருக்கிறார். இந்திய அணியில் மற்றொரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.உமேஷ் யாதவ் நீக்கப் பட்டு புவனேஷ்வர் குமார் அல்லது ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படக்கூடும்.

இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் இருக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு காயம் அடைந்துள்ளார். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் ஜாபர் அன்சாரி முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர்களுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், கிரேத் பாத்தி ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.

இங்கிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தால் கிரேத் பாத்திக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். மேலும் கடந்த இரு போட்டியிலும் மோசமாக விளையாடிய பென் டக்கெட்டுக்கு பதிலாக ஜாஸ் பட்லர் களமிறங்க உள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.

‘திசை திருப்பும் செயல்’

பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக விராட் கோலி கூறும்போது, "இந்த செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை. டெஸ்ட் தொடரில் இருந்து எனது கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற செய்திகள் வெளிவருவதாக நான் கருதுகிறேன். அதுவும் விசாகப்பட்டினத்தில் பெற்ற வெற்றிக்கு பின்னர்தான் இது கூறப்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் வருவதைவிட ஐசிசி என்ன முடிவு எடுக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களது முழு கவனமும் தொடரில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் உள்ளது’’ என்றார்.

படம்: பிடிஐ | நேரம்: காலை 9.30 | நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in