

2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்த நெருக்கடியான தருணத்தில் அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ராகுல் திராவிட். அவர் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு ஏகோபித்த ஆதரவை அப்போது பெற்றிருந்தார். அதற்கு காரணம், அவரது டிராக் ரெக்கார்டுகள்தான். வீரர், பயிற்சியாளர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் என பயணம் செய்த அனுபவம் கொண்டவர்.
அதனால், இந்திய அணிக்கு அவர் புதுப்பாய்ச்சல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதே நேரத்தில் அணியில் கேப்டன்சி மாற்றங்களும் நடந்தது. ரோகித் சர்மா மூன்று ஃபார்மெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இரு நாடுகள் இடையேயான (Bilateral Series) தொடர்களில் வெற்றி பெற்று வந்தது. குறிப்பாக டி20 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று வந்தது இந்தியா.
ஆனால், இதெல்லாம் ஆசிய கோப்பை தொடர் வரை மட்டுமே தொடர்ந்து. ஆசிய கோப்பையில் அனைத்தும் மாறியது. சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ‘சூப்பர் 4’ சுற்றோடு நடையை கட்டியது. இந்திய அணி வீரர்கள் மீது காட்டமான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர். இவர்கள் ஐபிஎல் விளையாடவும், இருநாடுகளுக்கு இடையேயான தொடரில் விளையாடவும் மட்டுமே சரிபட்டு வருவார்கள் என்ற டோனில் விமர்சனங்கள் எழுந்தன.
ராகுல் திராவிட்: பயிற்சியாளர் பணி - கிட்டத்தட்ட கடந்த 10 மாதங்களாக திராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக இயங்கி வருகிறார். அதற்கு முன்னர் அண்டர் 19, இந்தியா ஏ அணிக்கு அவர் பயிற்சி வழங்கியுள்ளார். குறிப்பாக 2016 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. நியூஸிலாந்தில் நடைபெற்ற 2018 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஐபிஎல் அணிகள் மற்றும் இந்திய அணியின் ஆலோசகராவும் திராவிட் செயல்பட்டுள்ளார். பந்த், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் திராவிட் இடம் பாடம் பயின்றவர்கள்.
2020 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. அப்போது உடனடியாக திராவிடை ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் போட்டு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் குரல் எழுப்பி இருந்தனர்.
சோதனை முயற்சிகள் போதும் திராவிட்: திராவிட் பயிற்சியாளராக இயங்கி வரும் இந்த 10 மாத காலத்தில் இந்திய அணியின் தேர்வு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தொடருக்கு ஒரு கேப்டனை நியமிப்பதில் தொடங்கி வீரர்கள் தேர்வு, பேட்டிங் ஆர்டர் என மாற்றங்களை கணக்கே இல்லாமல் இந்திய அணி மேற்கொண்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடர் வரை அந்த பரிசோதனை முயற்சி தொடங்கியது. இதெல்லாம் டி20 உலகக் கோப்பையை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதுதான். இருந்தாலும் ‘இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்?’ என கேட்கும் அளவுக்கு அந்த சோதனை முயற்சி தொடர்கதையாக உள்ளது.
இதில் ஆறுதல் என்னவென்றால், இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது தான். அவரை ஆடும் லெவனில் நிச்சயம் விளையாட செய்ய வேண்டும். அதேபோல பிரதான அணியில் அனுபவ வீரர் அஸ்வினை பிக் செய்தது. அதற்கு திராவிட் ஒரு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
நல்வாய்ப்பாக இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. அது அணிக்கு சிறந்தவொரு பயிற்சியாக இருக்கும்.
முக்கியமாக, முன்னாள் இந்திய வீரர் சாபா கரீம் சொன்னதை போல திராவிட் தனது ஹனிமூன் காலம் முடிவடைந்து விட்டது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில், இனி வரும் நாட்களில் இந்திய அணி மிக முக்கிய தொடர்களில் விளையாடுகிறது. அதில் வெற்றி பெறுவது அவருக்கும், அணிக்கும் பலன் கொடுக்கும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தனக்குள்ள அனுபவத்தை அவர் வீரர்களுடன் பகிர்ந்து கொண்டு ரங்கன் வாத்தியாரை போல செயல்பட வேண்டியது அவசியம். 'சார்பட்டா' படத்தில் இடையிலே தடுமாற்றம் காணும் கபிலனின் (ஆர்யா) நிலையில்தான் இந்திய அணி இப்போது உள்ளது. அவர் வெற்றி வியூகத்தை வகுத்து கொடுத்தால் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வசமாகும். அது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2023 உலகக் கோப்பை தொடருக்கு ஊக்கத்தையும் கொடுக்கும்.