Last Updated : 15 Sep, 2022 08:35 AM

 

Published : 15 Sep 2022 08:35 AM
Last Updated : 15 Sep 2022 08:35 AM

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் நுழைந்தார் லிண்டா

லிண்டா

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில்17 வயதான செக்குடியரசு வீராங்கனையான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 130-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போட்டித் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சனை எதிர்த்து விளையாடினார்.

ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் கியாங் வாங் 2-6, 3-6 என்ற நேர் செட்டில் 145-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹிபினோவிடம் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி 2-வது சுற்றில் கனடாவின் யுஜின் பவுச்சார்டை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை கர்மான் கவுர் 2-6 என இழந்தார். எனினும் 2-வது செட்டில் கர்மான் கவுர் செட்டை கைப்பற்றும் நிலைக்கு சென்றார். ஆனால் யுஜின் பவுச்சார்டு பின்தங்கிய நிலையில் இருந்து செட்டை டைபிரேக்கருக்கு கொண்டுவந்தார்.

முடிவில் 6-2, 7-6(2) என்ற செட் கணக்கில் பவுச்சார்டு வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் ரோசாலி வான் டெர் ஹோக் ஜோடி 1-6, 4-6 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் அனஸ்டசியா கசனோவா, ஒஸானா செலக்மேதேவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x