

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இவரை ரசிகர்கள் அன்போடு டிகே என அழைப்பது வழக்கம். அண்மையில் இந்த அறிவிப்பு வெளியானபோது ‘கனவு பலித்ததே’ என தனது எண்ண ஓட்டத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இத்தகைய சூழலில் விடாமுயற்சியின் பலனால் அவருக்கு கிட்டியுள்ள வாய்ப்பும், அதற்கு முன்னால் மலை போல நிற்கும் சவால்கள் குறித்தும் பார்ப்போம்.
புராணக் கதைகளில் வர்ணனை செய்யபப்டும் ஃபீனிக்ஸ் பறவையின் குணத்தை தன்னகத்தே தாங்கி நிற்பவர் டிகே. அவரது கிரிக்கெட் கரியரின் கிராப்பை எடுத்துப் பார்த்தால் அது இந்திய அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட இந்தியா மீது மனம் தளராது படையெடுத்த கஜினி முகமதுவின் முயற்சியை போன்றது அது. அதற்கு பல்வேறு தருணங்களை உதாரணமாக சொல்லலாம்.
வாய்ப்பு? - இவை அனைத்திற்கும் மகுடம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது அவரது அண்மைய கம்பேக். 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் வீரர்களின் வரவு அதற்கு ஒரு காரணம் என சொல்லலாம். தினேஷ் கார்த்திக், இந்திய அணி விளையாடும் போட்டிகளை வர்ணனை செய்யும் பணிகளை கவனித்தார். கிட்டத்தட்ட அது அவரது அதிகாரபூர்வமற்ற ஓய்வாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் டி20 லீக்கில் தொடர்ந்து விளையாடி வந்தார்.
‘இந்தியாவுக்காக விளையாட வேண்டும்’ என தனக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்த சுடரை, நம்பிக்கை எனும் எரிபொருளை கொண்டு ஒளிரச் செய்தார். 2022 ஐபிஎல் சீசன் அவரது வேட்கையின் தாகத்தை தணித்தது. 16 போட்டிகளில் 330 ரன்கள். சராசரி 55 மற்றும் 183.33 எனும் அவரது ஸ்ட்ரைக் ரேட் தேர்வுக்குழுவின் மண்டையை ஸ்ட்ரைக் செய்தது. முக்கியமாக அவர் பேட் செய்த பொசிஷன். மைக்கேல் ஜாக்சன் டேஞ்சரஸ் பாடலை கிரிக்கெட் களத்தில் பாடிக் கொண்டே ஆடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது டிகே இறுதி ஓவர்களில் ஆடும் ஆட்டம்.
2007 காலக்கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனராக களம் கண்டவர். இப்போது ஃபினிஷராக ஒரு ரவுண்டு வந்துக் கொண்டிருக்கிறார். தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி தனது இருப்பை அணியில் உறுதி செய்தார். அதன் வழியே அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ரன் குவிக்கும் வல்லமை படைத்தவர்.
2 சவால்கள்? - டி20 உலகக் கோப்பையில் (2007 மற்றும் 2010) என மொத்தம் 6 போட்டிகளில் டிகே விளையாடி உள்ளார். 3 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருடன் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளார். அதன் காரணமாக ஆடும் லெவனில் இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையும் ஆட வைக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது. அதனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே முதலில் பெரும் சவாலாக உள்ளது. இந்திய கேப்டன் ரோகித் ஃபினிஷர் தான் வேண்டுமென்பதில் உறுதியாகி இருந்தால் டிகே விளையாடுவதும் உறுதி.
ஆஸ்திரேலியாவில் நான்கு டி20 போட்டிகளில் மூன்று இன்னிங்ஸில் டிகே பேட் செய்துள்ளார். அதன் மூலம் 60 ரன்களை ஸ்கோர் செய்துள்ளார். பிரிஸ்பேன், மெல்பேர்ன் மற்றும் சிட்னி மைதானங்களில் அவர் விளையாடி உள்ளார். ஒரே போட்டியில் அதிகபட்சமாக 13 பந்துகளில் 30 ரன்களை சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அவரது சராசரி 30 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட்டும் டீசெண்டாக உள்ளது. டேன்ஸிங் ரோஸ் போல தாறுமாறாக கிரக்கெட் பந்து பவுன்ஸ் ஆகும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் டிகே தனது ஃபார்மை கேரி செய்ய வேண்டியதும் அவசியம். இது இரண்டும் நடந்தால் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் தனது கனவை டிகே பலித்திட செய்வார்.