

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி இணைந்து பணியாற்றவுள்ளார். அது குறித்த அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல டேவிட் சேக்கரும் அந்த அணியில் பயிற்சி ஆலோசகராக இணைய உள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் தலைமையில் களம் காண உள்ளது. இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அந்த நாட்டின் ஆடுகளங்களை சரியாக புரிந்து கொண்டுள்ள பயிற்சியாளர்கள் தங்கள் வசம் இருப்பது சரியானதாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பியுள்ளது. அதன் காரணமாக ஹஸ்ஸி மற்றும் சேக்கர் என இருவரும் இப்போது அந்தப் பயிற்சி ஆலோசாகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருமே பயிற்சியாளர் பணியில் போதிய அனுபவம் உள்ளவர்கள். மைக்கேல் ஹஸ்ஸி, ஐபிஎல் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். அதேபோல சேக்கர், இங்கிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர்களது அனுபவம் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு பெரிதும் உதவும்.
ஹஸ்ஸி, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேக்கர், பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என தெரிகிறது.
இங்கிலாந்து அணி கடைசியாக கடந்த 2010 வாக்கில் டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன்பிறகு அந்த அணி டி20 தொடர் எதிலும் வெற்றி பெறவில்லை. உள்நாடு, வெளிநாடு டி20 தொடர்களில் தோல்வியை தழுவியுள்ளது.