

லண்டன்: 2022-ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) நடத்துகிறது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கு முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 2-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபிர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளதாக டபிள்யூடிஏ அறிவித்துள்ளது. இதேபோன்று இரட்டையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா சினியாகோவா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் ஆன்ஸ் ஜபிர் பங்கேற்பது இதுவே முதன்முறை. டபிள்யூஏடி பைனல்ஸ் தொடருக்கு தகுதிபெற்றுள்ள முதல் அரேபிய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஆன்ஸ் ஜபிர். அதேவேளையில் ஸ்வியாடெக் 2-வது முறையாக கலந்துகொள்ள உள்ளார். நடப்பு சாம்பியனான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா சினியாகோவா ஜோடி 4-வது முறையாக பங்கேற்க உள்ளது. இந்த ஜோடி சமீபத்தில் அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றிருந்தது.
21 வயதான ஸ்வியாடெக் இந்தஆண்டில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றிருந்தார். மேலும் இத்தாலி ஓபன், மியாமி ஓபன், ஸ்டட்கர்ட் ஓபன், கத்தார் ஓபன், பிஎன்பி பரிபாஸ் ஓபன் ஆகியவற்றையும் வென்றிருந்தார்.