Last Updated : 14 Sep, 2022 06:18 AM

 

Published : 14 Sep 2022 06:18 AM
Last Updated : 14 Sep 2022 06:18 AM

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் - அலிசன் ரிஸ்கி அதிர்ச்சி தோல்வி, இந்தியாவின் அங்கிதா ரெய்னா ஏமாற்றம்

நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கிக்கு எதிராக பந்தை திருப்புகிறார் ரஷ்யாவின் அனஸ்டசியா கசனோவா. படம்: ம.பிரபு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 2-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ளவருமான அலிசன் ரிஸ்கி, 147-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா கசனோவாவை எதிர்த்து விளையாடினார். 1 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலிசன் ரிஸ்கியை 6-2, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார் அனஸ்டசியா கசனோவா.

அனஸ்டசியா தனது 2-வது சுற்றில் 174-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் கேட்டி ஸ்வானுடன் மோதுகிறார். கேட்டி ஸ்வான் முதல் சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் அரியன் ஹார்டோனோவை வீழ்த்தினார்.

இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ளவருமான அங்கிதா ரெய்னா, போட்டித் தரவரிசையில் 4-வது இடமும், உலகத் தரவரிசையில் 85-வது இடத்திலும் உள்ள ஜெர்மனியின் தட்ஜானா மரியாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தட்ஜானா மரியா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக அங்கிதாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 16 நிமிடங்களில் முடிவடைந்தது. மற்ற ஆட்டங்களில் 142-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஒஸானா செலமேதேவா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 171-ம் நிலை வீராங்கனையான கிரீஸின் டெஸ்பினாவையும், அர்ஜெண்டினாவின் நடியா பொடோரோஸ்கா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஒகமுராவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

தொடரின் 3-வது நாளான இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கர்மான் கவுர்தண்டி, கனடாவின் யுஜின் பவுச்சார்டுடன் மோதுகிறார். இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x