

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதையடுத்து, ‘இந்த வீரரை சேர்த்திருக்க வேண்டும்’, ’இந்த வீரர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்’, ‘இவர்கள் ஏன் இல்லை’ என பல கேள்விகளை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. அதனைக் கருத்தில் கொண்டே அணித் தேர்வை மேற்கொண்டுள்ளது பிசிசிஐ நிர்வாகம். குறிப்பாக பும்ரா, ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களின் வரவு அணிக்கு பலம் சேர்க்கிறது. ஜடேஜா இல்லாதது பலவீனமே.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங். இவர்களை தவிர முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹார் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பலம்: வழக்கம் போலவே இந்திய அணியின் முதுகெலும்பாக இருப்பது பேட்டிங் யூனிட்தான். ரோகித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், பாண்டியா, தீபக் ஹூடா என டி20 கிரிக்கெட்டில் தடபுடலாக வானவேடிக்கை காட்டும் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பவுலிங் யூனிட்டில் பும்ரா, ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களின் வரவு பலம். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் தரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்ட அஸ்வினை அணியில் சேர்த்திருப்பது கூடுதல் பலம். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் சேர்த்து மொத்தம் 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் ஆடும் லெவனில் இடம் பெறுவது அவசியமாகி உள்ளது.
பலவீனம்: காயம் அடைந்த காரணத்தால் அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் மாஸ் காட்டும் வல்லமை கொண்டவர் அவர். முக்கியமாக அவர் இல்லாதது அணியில் வலது, இடது பேட்டிங் காம்பினேஷனுக்கு சிக்கலை கொடுத்துள்ளது. அவருக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றுள்ள அக்சர் படேலுக்கு இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
மறுபக்கம் ரிஷப் பந்த். அவர் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெற்றுள்ளார். 58 டி20 போட்டிகளில் மொத்தம் 934 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 23.95. நடப்பு ஆண்டில் இதுவரை 17 டி20 போட்டிகளில் விளையாடி வெறும் 311 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஜடேஜா இல்லாத காரணத்தால் இடது கை பேட்ஸ்மேன் என்ற முறையில் அவர் அணியில் விளையாடுகிறார் என தெரிகிறது. அவரது ரோலில் இந்திய அணி பந்தயம் கட்டி உள்ளதை போலவே தெரிகிறது. இந்திய அணி தேர்வு குழுவின் நம்பிக்கையை அவர் காப்பாற்றுகிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டியுள்ளது.
வாய்ப்பு: ஹர்த்திக் பாண்டியாவின் ரோல் அணியில் மிகவும் முக்கியமானது. வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான அவர் ஃபினிஷராகவும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் திறன் கொண்டவர். அதனை டி20 உலகக் கோப்பையில் அவர் தொடர்ந்தால் இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதேபோல உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா ஆடவுள்ள ஆறு டி20 போட்டிகளிலும் வீரர்களை அவரவர் ரோலில் விளையாட செய்வது மிகவும் அவசியம். அதன் மூலம் அணிக்கும், வீரர்களுக்கும் பலன் கிடைக்கும். திடீரென ஒரு வீரரை மிடில் ஆர்டர் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் விளையாட பணிக்கும் போது அவர்கள் சிரமப்படுவதை ஆசிய கோப்பை தொடரில் பார்க்க முடிந்தது. தீபக் ஹூடா, இலங்கைக்கு எதிராக 7-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி ரன் சேர்க்க தவறியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதனால் இந்திய அணி நிர்வாகம் பரிசோதனை முயற்சிகளை இனி தொடரக் கூடாது.
முக்கியமாக, கேப்டன் ரோகித் சர்மா இந்தத் தொடரில் அணியில் திறம்பட வழிநடத்த வேண்டியது அவசியம். ஏனெனில் அவர் தோனி, கோலி போன்ற கேப்டன்கள் விட்டு சென்ற இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் என்பது அப்போது தான் உறுதியாகும்.
அச்சுறுத்தல்: இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் சரிவர சோபிப்பது கிடையாது என்ற ஒரு டாக் உள்ளது. கடந்த 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு இந்திய அணி சரிவர ஐசிசி தொடர்களில் விளையாடுவது கிடையாது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2015 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் மற்றும் 2019 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி என வரிசையாக இந்தியா தோல்விகளை தழுவியுள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஆட்டம் இந்த முறை இருக்க வேண்டும்.